விலை அதிகரிப்பையடுத்து எரிபொருட்கள் விற்பனையின் இலாபம் - நட்டம் தொடர்பில் தகவல் வெளியிட்ட அமைச்சர்

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையை அடுத்து எரிபொருட்களின் விலையின் இலாபம் மற்றும் நட்டம் என்பன தொடர்பான தகவல்களை வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ளார்.

தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய விலைக்கு அமைய ஒக்டென் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு 15 ரூபா 57 சதமும், ஒக்டென் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு 68 ரூபா 61 சதமும், இலாபம் கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒட்டோ டீசல் ஒரு லீற்றருக்கு 8 ரூபா 52 சதம் நட்டமும், சுப்பர் டீசல் ஒரு லீற்றருக்கு 20 ரூபா 27 சதம் இலாபமும் கிடைக்கப்பெறுவதாக அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்க்கு 334 ரூபா 39 சதம் நட்டம் ஏற்படுவதாகவும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை 2 மணிமுதல் அமுலாகும் வகையில் கனியவள கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்தது.

ஒக்டென் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அதன் புதிய விலை 470 ரூபாவாகும்.

அத்துடன் ஒக்டென் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 550 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 460 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 75 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அதன் புதிய விலை 520 ரூபாவாகும் என கனியவள கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கனியவள கூட்டுதாபனத்தின் விலைக்கு இணையாக லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.

அத்துடன் லங்கா ஐஓசி நிறுவனத்தின் எக்ஸ்ட்ரா ப்ரிமியம் பெற்றோல் ஓரு லீற்றரின் விலை 500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.