ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் , நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு துரித தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து நாடளாவிய ரீதியில் கடந்த இரு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன.
ஆரம்பத்தில் பொது மக்கள் மாத்திரம் இந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் , தற்போது , மதத் தலைவர்கள் , சட்டத்தரணிகள், நிபுணர்கள் உள்ளிட்ட பல தரப்பினராலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காலி முகத்திடலில் திரண்ட இளைஞர் , யுவதிகள்
அதற்கமைய இன்று சனிக்கிழமை காலை 8.30 மணிமுதல் கொழும்பு - காலி முகத்திடலில் பாரிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
'பக்க சார்பற்ற மக்கள் போராட்டம்' என்ற கருப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் பொது மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் குறித்த வீதியூடாக பயணித்த வாகனங்கள் ஒலியெழுப்பி (ஹோர்ன்) சென்றன.
அமைப்புக்கள் அல்லது சங்கங்கள் என எவையும் இன்றி இளைஞர் , யுவதிகளால் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதன் காரணமாக கொழும்பிற்குள் பிரவேசிக்கும் பல பிரதான வீதிகளில் பொலிஸாரினால் வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
அத்தோடு தநைகர் கொழும்பில் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கும் பாதுகாப்பு படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
காலை முதல் மாலை 3 மணி வரை காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தவர்கள் , பின்னர் ஜனாதிபதி செயலக வளாகத்திற்குச் சென்று அங்கு தமது எதிர்ப்பு கோஷங்களை எழுப்பத் தொடங்கினர்.
இதன் போது செயலகத்திற்குள் நுழைய முடியாதவாறு பொலிஸாரார் தடைகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் , அவற்றை தகர்ப்பதற்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முயற்சித்தனர்.
இதனால் அங்கு அமைதியற்ற நிலைமையும் ஏற்பட்டது. இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரால் வைக்கப்பட்டிருந்த காவலரண் மீது ஏறி பாதாதைகளை ஏந்தி எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அதேவேளை, வீதியின் இருந்தவாறு நோன்பு திறக்கும் சமயக் கடமையிலும் ஈடுபட்டனர்.
Post a Comment