கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியில் பொதுமக்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் இன்று நான்காவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.
ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த இளைஞர்களினால் கடந்த 9 ஆம் திகதி குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் அமைந்துள்ள பகுதியில் கூடாரங்களை அமைத்து, உலர் உணவுகளையும் ஒழுங்கு செய்து இந்த ஆர்ப்பாட்டத்தை இளைஞர்கள் முன்னெடுத்துள்ளனர்.
மேலும், கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியில் நேற்று இரவு கடுமையான மழை பெய்த போதிலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை, கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 வயதாக ரெப் இசை கலைஞரான ஷிராஸ் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட நிலையில், நேற்றிரவு 12 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாரடைப்பு இந்த மரணத்திற்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனை இன்றைய தினம் நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, இலங்கை கலைஞர்கள் தமது இரங்கலை வெளியிட்டு வருகின்றனர்
Post a Comment