இலங்கையில் உள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பற்றாக்குறை குறித்து இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) ஜனாதிபதிக்கு அவசர கடிதம் எழுதியுள்ளது.
வழக்கமான சத்திரசிகிச்சை நடவடிக்கைகள் போன்ற சில சேவைகளை குறைப்பதற்கும், உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு கிடைக்கக்கூடிய பொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும் ஏற்கனவே தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "இது ஒரு நல்ல விடயம் அல்ல, ஏனெனில் அவசரநிலை அல்லாத சூழ்நிலைகள் சில மணிநேரங்களில் உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளாக மாறும்.
மேலும் சில வாரங்கள் - நாட்களுக்குள் மருந்து பொருட்களை அவசரமாக கொண்டுவரப்பட்டால் தவிர அவசர சிகிச்சையும் சாத்தியமில்லை.
இது ஒரு பேரழிவான இறப்புகளை ஏற்படுத்தும், கோவிட், சுனாமி மற்றும் உள்நாட்டுப் போரின் ஒருங்கிணைந்த இறப்பு எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கலாம், ”என்று இலங்கை மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியது.
"தற்போதுள்ள மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களின் கையிருப்புகளை விவேகமான பயன்பாட்டினால் முடிந்தவரை பாதுகாக்கும் வகையில் நாங்கள் எங்கள் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளோம்.
அவசரமற்ற நோய்களைக் கொண்ட நோயாளிகளுக்கு கூட உகந்த கவனிப்பு தேவை என்பதை நாங்கள் உணர்கின்றோம். அவர்களின் சிகிச்சையை நிறுத்துவது நாட்டின் வைத்தியர்களுக்கு மருத்துவ மற்றும் நெறிமுறை சிக்கல்களை ஏற்படுத்தும்,"
எனவே, மருந்துப் பற்றாக்குறை மற்றும் சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய செயல் திட்டத்தை உருவாக்குவதற்காக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பதற்கு அவசர சந்தர்ப்பத்தை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தது.
Post a Comment