றம்புக்கணை சம்பவம் தொடர்பில் றம்புக்கணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, றம்புக்கணை பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கேகாலை பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை றம்புக்கணையில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரின் இறுதிக் கிரியைகள் நாளை (21) தேவாலேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரன்பெத்த ஹிரிவடுன்னேவில் இடம்பெறவுள்ளதன் காரணமாக பிரதேசத்தில் அமைதியை நிலைநாட்ட முப்படையினரின் ஆதரவை பெற்றுத்தருமாறு பாதுகாப்பு செயலாளரிடம் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்படி, 2022.03.21 இல. 2272/10 இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12 (1) வது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் கேகாலை மாவட்டத்தில் பொது அமைதியை பேணுவதற்காக முப்படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி றம்புக்கணை பொலிஸ் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் குறைந்த பட்ச அதிகாரத்தை பயன்படுத்தியபோது குறித்த நபர் உயிரிழந்தார்.
அதன்படி, இந்த மரணம் குறித்து பாரபட்சமற்ற முழுமையான விசாரணையொன்றை மேற்கொள்வதற்காக பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, பிரதி பொலிஸ்மா அதிபர் டி.ஐ.ஜி திலகரத்னவை நியமித்தார்.
இதன்படி, விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்து மூன்று நாட்களுக்குள் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியிருந்தார்.
Post a Comment