நாடு ஸ்தம்பிக்கும் அபாயம் ! அரச கட்டமைப்பிலுள்ள 10 முக்கிய தொழிற்சங்கங்கள் எடுத்துள்ள தீர்மானம்

ஜனாதிபதி உட்பட அரசாங்கத்திற்கு எதிராக தீவிரமடைந்துள்ள போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் அரச கட்டமைப்பில் உள்ள 10 பிரதான அத்தியாவசிய சேவைகளின் தொழிற்சங்கத்தினர் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதுடன், ஒரு சில தொழிற்சங்கத்தினர் 28 ஆம் திகதி போராட்டங்களிலும், பேரணிகளிலும் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

காலி முகத்திடல் எழுச்சி போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் 28 ஆம் திகதி வியாழக்கிழமை புகையிரதம், பெற்றோலியம், துறைமுகம், மின்சாரம், ஆசிரியர் சேவை சங்கம்,தபால், வங்கி, அரச மற்றும் அரச நிறுவனம், தோட்டத்தொழிற்துறை, அத்தியாவசிய சேவை சங்கம் ஆகிய அத்தியாவசிய சேவை சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதுடன், புகையிரதம், ஆசிரியர் சேவை சங்கம் உள்ளிட்ட ஒருசில தொழிற்சங்கத்தினர் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

அரசியல் நோக்கமற்ற வகையில் ராஜபக்ஷர்களிடமிருந்து நாட்டை பாதுகாப்பதற்காக எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் நடவடிக்கையில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஒன்றிணைந்த அத்தியாசிய சேவை சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஒன்றிணைந்த புகையிரத தொழிற்சங்கம்

ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கத்தின் பலவீனமான பொருளாதார முகாமைத்துவத்தின் விளைவை முழு நாட்டு மக்களும் அரசியல் பேதமன்றி எதிர்க்கொண்டுள்ளார்கள்.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள நிலையில் ராஜபக்ஷர்களின் மோசடியான ஆட்சியை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல் கட்சி,பேதங்களை துறந்து அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போரட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையிலும்,அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையிலும் 27 ஆம் திகதி நள்ளிரவு முதல் 28 ஆம் திகதி நள்ளிரவு வரை 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட தீர்மானித்துள்ளோம்.

எமது போராட்டத்தினால் புகையிரத சேவையினை பயன்படுத்தும் பொதுபயணிகள் நெருக்கடிக்குள்ளாகுவார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம் இருப்பினும் அரசாங்கத்தி;ற்கு எதிரான போராட்டம் வலுப்பெற வேண்டும் என்பதற்காகவே தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட தீர்மானித்துள்ளோம்.

30 புகையிரத தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என ஒன்றிணைந்த புகையிரத தொழிற்சங்கத்தின் செயலாளர் எஸ்.பி விதானகே தெரிவித்தார்.

அகில இலங்கை துறைமுக சேவை சங்கம்

நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து 'கோ ஹோம் கோத்தா' என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள்.

இருப்பினும் மக்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் ஜனாதிபதி முறையற்ற வகையில் அமைச்சரவையை நியமித்துள்ளார்.

ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கத்தையும் நாட்டு மக்கள் முழுமையாக புறக்கணிக்கிறார்கள். மக்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அரசியல் நோக்கமற்ற வகையில் 28 ஆம் திகதி வியாழக்கிழமை 17 தொழிற்சங்கத்தினரை ஒன்றிணைத்து அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட தீர்மானித்துள்ளோம் என அகில இலங்கை துறைமுக சேவை சங்கத்தின் செயலாளர் நிரோஷன் கொரகாஹேன்ன தெரிவித்தார்.

பெற்றோலிய வளங்கள் சேவை சங்கம்

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து ஜனாதிபதி பதவி விலக வேண்டும். நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் 28 ஆம் திகதி வியாழக்கிழமை கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து,பெற்றோலிய வளங்கள் கூட்டுத்தாபனம் வரை பேரணியாக சென்று எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்படுவதுடன், நாளைய தினம் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்படவும் தீர்மானித்துள்ளோம் என பெற்றோலிய வளங்கள் சேவை சங்கத்தின் செயலாளர் அசோக ரன்வெல தெரிவித்தார்.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்

நாட்டு மக்களின் கருத்திற்கு மதிப்பளித்து ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும். அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் 28 ஆம் திகதி வியாழக்கிழமை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜாசிங்க தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபை சேவை சங்கம்

தேசிய மின்விநியோக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிக்கு அரசநாங்கம் முழுமையாக பொறுப்பேற்று பதவி விலகுவது நாகரீகமானதாக அமையும் இருப்பினும் ஜனாதிபதி உட்பட அரசாங்கம் அவற்றை பின்பற்றவில்லை.

காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் இளைஞர்களின் எழுச்சி போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தொழிற்சங்கத்தினரது போராட்டத்தில் கலந்துக்கொள்வோம் என இலங்கை மின்சார சபை சேவை சங்கத்தின் தலைவர் ரஞ்ஜன் ஜயலால் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம்

ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்ற எதிர்ப்பு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் தீவிரமடைந்துள்ளது.மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து ஜனாதிபதி உட்பட அரசாங்கம் பதவி விலக வேண்டும்.

நாளை தினம் இடம்பெறும் போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட போவதில்லை என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்தார்.

மக்களின் கருத்திற்கு மதிப்பளித்து ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் பதவி விலகாவிடின் நாளைய தினம் ஒரு அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்து எதிர்வரும் மாதம் 06 ஆம் திகதி வரை பணிப்புறக்கணிப்பு இல்லாத போராட்டத்தில் ஈடுப்பட்டு 6ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் ஹர்தால் நடவடிக்கையில் ஈடுப்பட தீர்மானித்துள்ளோம்.

முழு அரசியல் கட்டமைப்பும் தோல்வியடைந்துள்ள காரணத்தினால் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றினைந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள். அரசியல் செய்வதற்கும் நாடு இருக்க வேண்டும்.

நாட்டு மக்கள் அனைவரும் எதிர்வரும் 6 ஆம் திகதி ஹர்தால் நடவடிக்கையில் கலந்துக்கொள்ள வேண்டும் என ஒன்றிணைந்த அத்தியாவசிய சேவை சங்கத்தினர் நாட்டு மக்களிடம் அழைப்பு விடுத்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.