இது அரசியல் பேசும் இடமல்ல – கப்ராலை சாடினார் ரணில் – மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று(புதன்கிழமை) கூடிய சர்வகட்சி மாநாட்டில் அரசியல் பேசியதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியுள்ளார்.

சர்வகட்சி மாநாட்டினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய கப்ரால், இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து அரசியல் கட்சிகளுக்கு விளக்கமளித்ததுடன், தற்போதைய நிலைமைக்கு முன்னாள் அரசாங்கம் மீது சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

கப்ராலின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அவரின் குறித்த கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, மாநாட்டில் அரசியல் பேசியதற்காக கப்ராலை கடுமையாக சாடினார்.

பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசிக்கவே இந்த மாநாடு கூட்டப்பட்டதாக கூறியுள்ள முன்னாள் பிரதமர், இது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விளையாடும் இடம் அல்ல எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் “முன்னாள் அரசாங்கத்தின் தவறுகளினால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது” என்று தனது உரையை ஆரம்பித்துள்ளமை வருத்தமளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“முன்னாள் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் அரசாங்கத்திற்கு தெரியும். அரசியல் வேறுபாடுகளுக்காக மீண்டும் ஒருமுறை சண்டையிட்டு ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதற்காக நாங்கள் இன்று இங்கு வரவில்லை.

நாங்கள் அரசியல் பேசுவதற்காக இங்கு வரவில்லை. இதைத் தொடர்ந்தால் இளவரசர் விஜயன் இலங்கை வருவதைப் பற்றிய விவாதத்தில் முடிந்துவிடும்.

அவர் இலங்கைக்கு வரவில்லையென்றால் எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது எனத் தோன்றுகிறது” என ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் கருத்திற்கு மன்னிப்பு கோருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.