எமது நாட்டில் நாளாந்தம் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதுடன் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. அத்துடன் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் பெரிதும் சிரமப்படுவதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம்.
இவ்வாறான நெருக்கடியான சோதனைகள் ஏற்படும்போது அல்லாஹ்வின் அடியார்களாகிய நாம் அல்லாஹ்வின் பக்கம் திரும்ப வேண்டும். இச்சோதனைகள் நீங்குவதற்காக தொழுகை, நோன்பு, சதகா, திக்ர், இஸ்திஃபார், துஆ போன்ற நல்லமல்கள் மூலம் அல்லாஹ்வின் பக்கம் நாம் நெருங்க வேண்டும்.
அந்த வகையில் தற்போது பொருளாதார ரீதியில் ஒவ்வொருவரும் எதிர்நோக்கக்கூடிய சவாலை எதிர்கொள்வதற்காக இஸ்லாம் வழங்கியுள்ள வழிகாட்டல்கள் இன்றைய காலகட்டத்தில் பெரிதும் பயன்மிக்கவையாகும். அவ்வழிகாட்டல்கள் நெருக்கடியான நிலையிருந்து மீள்வதற்கும் பொருளாதாரத்தில் வலிமையடைந்திடவும் பெரிதும் உதவக்கூடியவையாகும்.
1. இவ்வுலகில் அனைத்து விடயங்களும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகின்றன என்பதை ஒவ்வொரு முஃமினும் நம்புவதுடன் அவன் பக்கம் திரும்புதல்.
قُلْ لَّنْ يُّصِيْبَـنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَـنَا هُوَ مَوْلٰٮنَا وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ (9:51)
'ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்' என்று (நபியே!) நீர் கூறும்;. முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! (9:51)
2. எமது சகல காரியங்களையும் அல்லாஹ்விடமே பாரம் சாட்டுதல்.
وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهٗؕ (03:65)
எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன். (65:03)
3. ஓவ்வொருவரும் எல்லா நிலைமைகளிலும் அல்லாஹ்வை அஞ்சி, அவனது கட்டளைகளைப் பின்பற்றி வாழ்வதுடன், அவன் தடுத்த விடயங்களிலிருந்து முற்றாக விலகி நடத்தல்.
وَلَوْ اَنَّ اَهْلَ الْقُرٰٓى اٰمَنُوْا وَاتَّقَوْا لَـفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكاٰتٍ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ (7:96)
நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால் நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் (பரகத்துகளை) பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம் (7:96)
وَمَنْ يَّـتَّـقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مَخْرَجًا (65:2) وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ (65:3)
எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கிறாரோ அவருக்கு (ஒவ்வொரு சங்கடத்திலிருந்தும்) வெளியேறும் வழியை அவன் ஆக்குவான். மேலும், அவர் எண்ணிராத விதத்தில் அவருக்கு வாழ்வாதாரங்களை அவன் வழங்குவான். (65:2) (65:3)
4. பாவங்களிலிருந்து மீண்டு தௌபா, இஸ்திஃபார் செய்தல்.
اسْتَغْفِرُوْا رَبَّكُمْ اِنَّهٗ كَانَ غَفَّارًا (71:10) يُّرْسِلِ السَّمَآءَ عَلَيْكُمْ مِّدْرَارًا (71:11) وَّيُمْدِدْكُمْ بِاَمْوَالٍ وَّبَنِيْنَ وَيَجْعَلْ لَّـكُمْ جَنّٰتٍ وَّيَجْعَلْ لَّـكُمْ اَنْهٰرًا (71:12)
நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்;. நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்' (71:10). '(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான். (71:11) 'அன்றியும் அவன் உங்களுக்குப் பொருட்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்;. இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்;. உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான். (71:12)
இறைவனிடம் பாவமன்னிப்பு வேண்டுதல், சிக்கல் நிறைந்த வாழ்விலிருந்து ஈடேற்றத்தைப் பெற்றுத் தரும் என்பதை பின்வரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழி உறுதிப்படுத்துகிறது.
عن عبد الله بن عباس رضي الله عنهما قَال : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : 'مَنْ لَزِمَ الِاسْتِغْفَارَ جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجًا ، وَمِنْ كُلِّ هَمٍّ فَرَجًا ، وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ' رواه أبو داود ، وابن ماجه ، وأحمد
யார் இறைவனிடம் பாவமன்னிப்பு (இஸ்திஃபார்) வேண்டுவதை வழக்கமாக கடைப் பிடித்து வருகிறாரோ, இறைவன் அவருக்கு எல்லா விதமான நெருக்கடிகளிலிருந்தும் நீங்கிக் கொள்வதற்கான வழிகளையும், துயர்களிலிருந்து நிவாரணத்தையும் ஏற்படுத்திக் கொடுப்பான். மேலும், அவர் நினையாப் புறத்திலிருந்து அவருக்கு ஆகாரமும் அளிப்பான் என இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அபூ தாவூத், இப்னு மாஜாஹ், அஹ்மத்)
5. பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் அல்லாஹு தஆலாவிடத்தில் உதவி தேடல்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். (அல் குர்ஆன் 2:153)
6. வசதிபடைத்தோர்கள், சமூக நலன்விரும்பிகள் நெருக்கடியான இந்நிலையில்; சிரமத்திலுள்ளோர், பாதிக்கப்பட்டோர் என தேவையுடையோர்களை இனங்கண்டு உதவி செய்தல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 'யார் ஒரு சகோதரனின் ஒரு துன்பத்தை நீக்குகிறாரோ அதற்குப் பகரமாக அவரை விட்டு அல்லாஹ் மறுமை நாளில் அவருடைய துன்பங்களில் ஒன்றை நீக்குகிறான்.' (ஸஹீஹு முஸ்லிம் : 2699)
7. இக்காலப்பகுதியில் உணவு, உடை போன்றவற்றிற்கான பணத்தை அளவு மீறி செலவழிக்காமல் முடிந்தளவு மிக அத்தியவசியமான செலவுகளுடன் போதுமாக்கிக் கொள்ளல்.
وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا ۚ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْن (7:31)
உண்ணுங்கள், பருகுங்கள். எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (7:31)
8. வீணான பயணங்கள் மற்றும் தேவையற்ற பொழுதுபோக்குகளை முற்றாக தவிர்த்துக் கொள்ளல்.
9. வியாபாரிகள் விற்கும் போதும் வாங்கும் போதும் நம்பிக்கையுடனும் வாய்மையுடனும் நடப்பதுடன் மோசடி செய்தல், பொய்ச் சத்தியம் செய்தல், ஏமாற்றுதல், குறைகளை மறைத்து விற்பனை செய்தல், கலப்படம் செய்தல்; போன்ற மோசமான செயற்பாடுகளை விட்டும் கட்டாயமாகத் தவிந்து கொள்ளல்.
عَنْ أَبِي سَعِيدٍ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: التَّاجِرُ الصَّدُوقُ الأَمِينُ مَعَ النَّبِيِّينَ، وَالصِّدِّيقِينَ، وَالشُّهَدَاءِ. (سنن الترمذي : 1209)
'நம்பிக்கையும் வாய்மையும் கொண்ட வியாபாரி மறுமையில் நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், ஷஹீதுகளுடனும் இருப்பார்' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸஈத் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸுனன் அத்திர்மிதீ: 1209)
ஆகவே, மேற்கூறப்பட்ட வழிகாட்டல்களைக் கவனத்திற் கொண்டு செயற்படுமாறு மக்களை அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்நெருக்கடியான நிலைமையை சீராக்குவானாக.
அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் - ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ACJU/NGS/2022/077 - 2022.03.31 (1443.08.27)
Post a Comment