பல துறைகளில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ள சவூதி அரேபியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் ஆல் சவூதிடம் தெரிவித்தார்.
இலங்கை வந்துள்ள சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, தொழில்நுட்பம் அடிப்படையிலான அபிவிருத்தி மற்றும் கொழும்பு துறைமுக நகரம் ஆகிய துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளுக்கான வாய்ப்புகளை எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும், இலங்கையின் பொருளாதாரத்தில் கொவிட்-19 தொற்றுநோய் ஏற்படுத்திய தாக்கம் குறித்து சவூதி இளவரசர் அல் சவுதிடம் விளக்கமளிக்கப்பட்டது.
அதேநேரம், குறைந்த பணப்பரிமாற்றம், சுற்றுலாத்துறையின் வீழ்ச்சி, வறட்சியான காலநிலையினால் நீர் மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் எரிபொருளுக்கான தேவை அதிகரிப்பு போன்றவற்றின் தாக்கத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் தமது நாடும் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், இத்துறையில் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும் சவூதி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
பல துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் ஜனாதிபதி மற்றும் சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடினர்.
இதேவேளை இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாசர் பின் ஹுசைன் அல்-ஹார்த்தி, சவூதி வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அப்துல்ரஹ்மான் அர்கான் அல்தாவூத், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் மற்றும் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
Post a Comment