எரிபொருள் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்.

நாட்டில் அன்றாட பாவனைக்கு தேவையான எரிபொருள் தொகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதனை எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன.

எனவே நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய மின்சக்தி அமைச்சர் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை இலங்கை மின்சாரசபைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் எரிபொருள் இறக்குமதி தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில் ,

நுகர்வோர் தேவைக்கு அதிகமாக எரிபொருளை பெற்றுக் கொள்வதன் காரணமாகவே கடந்த சில வாரங்களாக எரிபொருளுக்கான தேவை அதிகரித்துள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. எனினும் தற்போது அந்த நிலைமையை படிப்படியாக சுமூகமடைந்து வருகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் தேவையான எரிபொருளை உரிய முறையில் இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது அவற்றை கப்பலிலிருந்து தரையிறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு நாடளாவிய ரீதியில் எரிபொருளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் காணப்பட்ட நீண்ட வரிசை தற்போது படிப்படியாகக் குறைவடைந்துள்ளது.

நாட்டில் தற்போது தேவைக்கு ஏற்ற எரிபொருள் காணப்படுவதால் வரிசையில் காத்திருந்து , தேவைக்கு அதிகமாக எரிபொருளை கொள்வனவு செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு நுகர்வோரை கேட்டுக் கொள்கின்றோம்.

கடந்த சில தினங்களாக எரிபொருளை இறக்குமதி செய்யும் கப்பல்கள் சில ஒரே தடவையில் நாட்டுக்கு வருகை தந்தமையால் சில சிக்கல்கள் ஏற்பட்டன.

எவ்வாறிருப்பினும் தற்போது அந்த நிலைமையை சீராக முகாமைத்துவம் செய்து கொண்டிருக்கின்றோம். அதற்கமைய இறக்குமதி செய்யப்பட்ட டீசல் தொகையை தரையிறக்கி முத்துராஜவெல களஞ்சியசாலையில் தரையிறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தவிர கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள மேலும் இரு கப்பல்களிலிருந்து டீசல் தரையிறக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நாளை திங்கட்கிழமை மற்றும் நாளை மறுதினம் செவ்வாய்கிழமைகளில் மேலும் ஒரு தொகை டீசல் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

அதற்கமைய தொடர்ந்தும் மசகு எண்ணெய், டீசல், பெற்றோல் அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய மின்சக்தி அமைச்சர் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை இலங்கை மின்சாரசபைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மின்உற்பத்திகான எரிபொருளை எந்த அடிப்படையில் வழங்குவது என்பற்கான செயற்திட்டம் இறுதி செய்யப்படவுள்ளது.

கொலன்னாவை களஞ்சியசாலைக்கு டீசல் வழங்கியதன் பின்னர் , களனி திஸ்ஸ மின்உற்பத்தி நிலையத்திற்கும் எரிபொருள் வழங்கப்படும். இன்று முதல் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். நாளை திங்கட்கிழமை முதல் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களுக்கும் தேவையான எரிபொருள் விநியோகிக்கப்படும்.

விவசாய பிரதேசங்களுக்கு தேவையான டீசல் தொகையை குறைவின்றி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயத்துறை அமைச்சர் எம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கமைய கொழும்பிற்கு அப்பால் அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கும் எரிபொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குரிய எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் நாடளாவிய ரீதியில் 1200 இற்கும் அதிகமானளவு காணப்படுகின்றன. ஐ.ஓ.சி. நிறுவனத்திற்குரிய எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் சுமார் 210 காணப்படுகின்றன. இவை அனைத்திலும் கடந்த தினங்களில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.

இந்நிலையில் தனியார் பேரூந்து சேவையாளர்களின் கோரிக்கைக்கு அமைய எவ்வாறு எரிபொருளை விநியோகிப்பது என்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. அதற்கமையவே இலங்கை போக்குவரத்துசபை டிப்போக்கள் ஊடாக தனியார் பேரூந்துகளுக்கு எரிபொருளை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டது.

நாளை மற்றும் நாளை மறுதினத்திலிருந்து இதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க முடியும். நாட்டில் மாதமொன்று ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிபொருள் தேவைப்படும். அதற்கேற்ப தேவையான எரிபொருளை தடையின்றி இறக்குமதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.