கடும் சவாலுக்கு மத்தியில் ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து கலந்துரையாடல்களை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று (23) சர்வகட்சி மாநாடு நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேண்டுக்கோளுக்கு இணங்க இந்த சர்வகட்சி மாநாட்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில், ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் பல சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளாதிருப்பதற்கு தீர்மானித்துள்ளது.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோர் சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளனர்.

தமது பரிந்துரைகளை, சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளும் கட்சிகளின் ஊடாக பகிர்ந்துக்கொள்ளவுள்ளதாக வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் தீர்மானித்துள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிடுகின்றார்.

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரனும் இதை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதில் கலந்து கொள்ளாமலிருப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மேலும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்துள்ளதாக அதன் தலைவர் மனோ கணேஷன் கூறியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வகட்சி மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கலந்துக் கொள்ளாது என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில், அரசாங்கத்தினால் சர்வகட்சி மாநாட்டிற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, மாநாட்டில் கலந்துக்கொள்வதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

எனினும், சர்வகட்சி மாநாட்டில் தாம் கலந்துக்கொள்ள போவதில்லை என டெலோ கட்சி அறிவித்துள்ளது.

இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளாதிருப்பதற்கு தீர்மானித்துள்ளன.

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடும் நோக்கில் அனைத்து கட்சிகளின் கருத்துக்களை கேட்டறிந்துக்கொள்ளும் வகையில் இந்த சர்வகட்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.