தமிழகத்தின் அரிச்சல்முனை பகுதியிலுள்ள மணல் திட்டில் கைவிடப்பட்டிருந்த 6 இலங்கையர்களை இந்திய கடலோர காவற்படையினர் மீட்டுள்ளனர்.
மன்னாரிலிருந்து இவர்கள் சட்டவிரோதமான முறையில் படகொன்றில் அரிச்சல்முனைக்கு சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மன்னாரில் இருந்து அழைத்துவரப்பட்ட ஆண் ஒருவர், இரண்டு பெண்கள், மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் இன்று அதிகாலை ஒரு மணியளவில் தமிழகத்தின் தனுஷ்கோடிக்கு அருகேயுள்ள நான்காவது மணல் திட்டு பகுதியில் இறக்கிவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்டபம் கடலோர காவற்படையினர் 6 இலங்கையர்களையும் மீட்டு மண்டபம் முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மணல் திட்டில் காலை முதல் குடிநீர், உணவின்றி இருந்தவர்களுக்கு இந்திய அதிகாரிகள் உணவு வழங்கியுள்ளனர்.
விலைவாசி உயர்வு காரணமாக இலங்கையில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், இந்தியாவிற்கு குடிபெயர எண்ணியதாக குறித்த இலங்கையர்கள் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.
விசாரணைக்கு பின், அனுமதி இன்றி தமிழகத்திற்குள் நுழைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment