நாடு முழுவதும் 4 வகையான பொருட்களை தவிர, ஏனைய அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தட்டுப்பாடின்றி கிடைப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கு வழங்குவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு, இன்று முதல் தடவையாக கூடியது.
இந்த குழுவின் தலைவரும், நிதி அமைச்சருமான பஷில் ராஜபக்ஸ தலைமையில் இந்த குழு நிதி அமைச்சில் இன்று கூடி, விடயங்களை ஆராய்ந்துள்ளது.
இதன்படி, கோதுமை மா, பால் மா, எரிவாயு மற்றும் சீமெந்து தவிர்ந்த, ஏனைய அனைத்து பொருட்களும் தட்டுப்பாடின்றி மக்களுக்கு தற்போது கிடைக்கின்றமை தெரியவந்துள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிடுகின்றது.
இதேவேளை, பொருளொன்றின் விலை, மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுப்பட்டதாக காணப்படுகின்றமையினால், பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதன்போது, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், ”விலை பட்டியலை காட்சிப்படுத்துவது கட்டாயப்படுத்த” வேண்டும் என்ற சட்டம் தற்போது நாட்டிற்குள் அமுலாகவில்லை என அமைச்சர் லசந்த அழகியவண்ண கூறியுள்ளார்.
இதனால், வர்த்தகர்கள் தமது விருப்பத்திற்கு பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும் அவர், நிதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர், அத்தியாவசிய பொருட்களின் விலைகளையேனும், காட்சிப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்குள் காணப்படுகின்ற அந்நிய செலாவணி பிரச்சினையானது, தற்காலிக பிரச்சினை என கூறிய நிதி அமைச்சர், அதனூடாக மக்களுக்கு ஏற்படும் அழுத்தங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment