வெலிவேரிய பகுதியில் கொவிட் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மஹர சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஐந்து பேரை கொண்ட குடும்பத்தில் இருவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
50 மற்றும் 25 வயதான தந்தை மற்றும் மகள் ஆகியோரே ஒமிக்ரோன் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் நோய் அறிகுறிகள் தென்பட்ட நிலையில், இருவருக்கும் நடத்தப்பட்ட PCR பரிசோதனையின் ஊடாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மஹர சுகாதார வைத்திய அதிகாரி நிஹால் கமகே தெரிவித்தார்.
இந்த குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய மூவருக்கும் நோய் அறிகுறிகள் தென்படுகின்ற நிலையில், அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஒமிக்ரோன் தொற்று எவ்வாறு பரவியது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என அவர் கூறுகின்றார்.
இவர்கள் இருவரும் சீதுவ பகுதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றி வருவதாகவும், இருவரும் பஸ்ஸிலேயே பயணித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் வீட்டிற்கு வருகைத் தந்த கம்பஹா பகுதியைச் சேர்ந்த உறவினர்கள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள், சமூகத்திற்குள் இருந்து அடையாளம் காணப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.(LD)
Post a Comment