புதிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட புதிய எரிவாயு சிலிண்டர்கள் இன்று முதல் சந்தைக்கு விநியோகம்.

நாட்டில் எரிவாயு விநியோகம் தொடர்பாக இரு பிரதான நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்குமாறு நுகர்வோர் அதிகாரசபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்குமாறு இரு நிறுவனங்களுக்கும் அறிவுறுத்துமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை மட்டுமே விநியோகிக்குமாறு குறித்த இரு நிறுவனங்களுக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சிவில் சமூக செயற்பாட்டாளர் நாகாநந்த கொடித்துவக்குவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சந்தைக்கு விநியோகிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களையும் திரும்பப் பெறுமாறு இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும், எரிவாயு சிலிண்டர்களின் புதிய தொகுதிகளில் கலவையைக் குறிக்கும் ஸ்டிக்கர் ஒன்றைக் காட்சி படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு தொடர்பில் ஆராய்ந்து தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

எனினும் சமையல் எரிவாயு கசிவு மற்றும் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள இறுதி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என அவதானிக்கும் அதிகாரம் தனக்கில்லை என குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பொல தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே பேராசிரியர் சாந்த வல்பொல இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு கோணங்களில் ஆராயப்பட்டுள்ள நிலையில், இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெடிப்பு சம்பங்களுக்கான காரணம் மற்றும் அதனை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பில் அறிக்கையில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் சாந்த வல்பொல குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த 48 நாட்களில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு தொடர்பான 815 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பதிவாகியுள்ளதுடன், 95 வீதமான சம்பவங்களில் எரிவாயு அடுப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, எரிவாயு கலவை தொடர்பான தகவல்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட புதிய எரிவாயு சிலிண்டர் இன்று முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என என தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, தரநிர்ணய நிறுவகத்தின் தரநிலையின் பிரகாரம் சம்பந்தப்பட்ட எரிவாயு சிலிண்டர்களின் புரொப்பேன் பெறுமானம் நூற்றுக்கு 30 சதவீதமாகவும், பியூட்டேன் பெறுமதி நூற்றுக்கு 70 சதவீதமாகவும் காணப்படும்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் எரிவாயு சிலிண்டர்களில் மெர்காப்டன் கலவை 14 சதவீதமாக காணப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.