வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் விவகாரத்தில் திடீர் திருப்பம்!

குருணாகல் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வைத்தியர் எஸ்.எஸ்.எம்.ஷாபியை மீண்டும் சேவையில் இணைப்பது தொடர்பில் அரசாங்க சேவை ஆணைக்குழு இதுவரையில் எவ்வித இறுதி தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று ஆணைக்குழுவின் செயலாளர் எம்.ஏ.பீ.தயா செனரத் தெரிவித்துள்ளார்.
வைத்தியர் ஷாபி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட காலத்திற்கான சம்பளத்தை வழங்கும் அதேவேளை, அவரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் செயலாளரினால் குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு நேற்று முன்தினம் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரினால் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் எஸ்.எஸ்.எம்.ஷாபி மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவரை கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதியிலிருந்து கட்டாய விடுமுறையில் அனுப்புவது பொறுத்தமானதென , சுகாதார அமைச்சின் செயலாளரினால் ஆலோசனை வழங்கப்பட்டது.

அதற்கு அரச சேவைகள் ஆணைக்குழுவின் சுகாதார சேவைக்குழுவினால் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டது.

அதற்கமைய கட்டாய விடுமுறையில் உள்ள அவருக்கு , முந்தைய கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் , மீண்டும் சேவைக்கு அழைப்பதற்கும் ஆலோசனைகளைக் கோரி சுகாதார அமைச்சு அல்லது வேறு எந்தவொரு நிறுவனத்தினாலும் இதுவரையில் ஆணைக்குழுவிற்கோ அல்லது அதன் சுகாதார சேவை குழுவிற்கோ கோரிக்கை விடுக்கப்படவில்லை.

அத்தோடு அது போன்றதொரு ஆலோசனை அரச சேவை ஆணைக்குழுவினாலோ அல்லது அதன் சுகாதார குழுவினாலோ வெளியிடப்படவுமில்லை.

எவ்வாறிருப்பினும் கட்டாய விடுமுறையில் சென்றுள்ள அரச அதிகாரி தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தரப்பினர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.