ஒமிக்ரோன் வைரஸ் திரிபு; இலங்கையின் நிலவரம் மிகமோசமடையலாம் என எச்சரிக்கை!

புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரோன் திரிபு ஏனைய திரிபுகளை விடவும் வீரியம் கூடியதாக இருக்குமாயின், இலங்கையின் தற்போதைய நிலைவரம் எதிர்வருங்காலத்தில் மிக மோசமடையக்கூடும்.

ஆகவே மிகமோசமான நிலையைக் கையாள்வதற்கு இப்போதிருந்து தயாராகவேண்டும். அதன் ஓரங்கமாக வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களுக்கான பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல் தொடர்பில் உடனடியாக அவதானம் செலுத்தப்படவேண்டும் என்று சுகாதாரக் கொள்கைகளுக்கான நிலையத்தின் தலைவர் வைத்தியநிபுணர் ரவீந்திர ரன்னன் எலிய சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா 19 வைரஸின் ஒமிக்ரோன் திரிபு நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதுடன் அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் கையாள்வதற்குத் தயாராக வேண்டியதன் அவசியம் குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

கொரோனா வைரஸ் தொற்றினால் தற்போது நாளொன்றுக்கு சுமார் 20 பேர் வரையில் உயிரிழக்கின்றனர். ஆனால் உண்மையான தரவுகளின்படி இந்த எண்ணிக்கை மேலும் உயர்வானதாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன். தடுப்பூசி வழங்கல் மூலம் 50 சதவீதம் வரையில் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்தமுடியும்.

இருப்பினும் குழந்தைகள் உள்ளடங்கலாக தடுப்பூசி வழங்கல் நூறு சதவீதம் பூர்த்தியடைந்த பின்னரும் பரிசோதனைகளை மேற்கொள்ளல், தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களைக் கண்டறிதல், தனிமைப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகள் உரியவாறு முன்னெடுக்கப்படாவிடின் தொற்றுப்பரவலை முழுமையாக முடிவிற்குக்கொண்டுவரமுடியாது.


தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழப்பதற்கான வாய்ப்பு தடுப்பூசி வழங்கல் மூலம் குறைக்கப்படும். அதன்படி தொற்றுப்பரவல் வேகம் அதிகரிக்கும் பட்சத்தில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் உயிரிழக்கும் வீதம் அதிகரிக்கக்கூடும்.

எமது நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையானோருக்கு தடுப்பூசி முழுமையாக வழங்கப்பட்டிருக்கின்ற போதிலும், கடந்த 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தொற்றுப்பரவல் வீதம் தற்போது உயர்வாகக் காணப்படுகின்றது.

இந்தத் தோல்விக்குக் காரணம் என்னவெனில் சுகாதாரத்துறையினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஏனைய அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரும் தடுப்பூசி வழங்கலில் மாத்திரமே தமது கவனத்தைக் குவித்திருக்கின்றனர்.

ஆனால் அது போதுமானதல்ல. அவுஸ்திரேலியாவைப் போன்று அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்கி, கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையைப் பூச்சியத்திற்குக் கொண்டுவரமுடியும்.

இருப்பினும் அதற்கு தற்போது மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை பன்மடங்கால் அதிகரிப்பதுடன் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களைக் கண்டறிதல் மற்றும் அவர்களைத் தனிமைப்படுத்தல் ஆகிய செயன்முறைகளையும் துரிதப்படுத்தவேண்டும்.

அதுமாத்திரமன்றி தடுப்பூசி மூலம் உருவாகும் நோயெதிர்ப்புசக்தி விரைவில் அதன் செயற்திறனை இழந்துவிடும். செயலூட்டித் தடுப்பூசிகளை வழங்குவதன் ஊடாக நோயெதிர்ப்புசக்தியை மீண்டும் உருவாக்கமுடியும் என்றாலும், அது தொற்றிலிருந்து எவ்வளவு காலத்திற்குப் பாதுகாப்பை வழங்கும் என்பது கண்டறியப்படவில்லை.

ஆகவே இந்த வைரஸ் திரிபுகள் எந்தளவிற்கு வலுவானவை என்பதை அறியாததன் காரணமாக, நாம் அவற்றுடனான போராட்டத்திலேயே இருக்கின்றோம்.

துரதிஷ்டவசமாக முன்னர் வெளியான தரவுகளின்படி ஒமிக்ரோன் திரிபு அனைத்தையும்விட வலுவானதாக இருக்கும் பட்சத்தில், தற்போதைய நிலைவரம் மிகமோசமடையும். எனவே மிகமோசமான நிலையைக் கையாள்வதற்கு நாம் தயாராகவேண்டும்.

தற்போதைய நிலைவரத்தை மிகத்தீவிரமானதாகக்கருதி அதற்குத் தயாராவதன் மூலம் ஒமிக்ரோன் திரிபின் தாக்கத்தைத் ஒருநாளேனும் தாமதிக்கமுடியுமாயின், அது ஒப்பீட்டளவில் சிறந்ததாகும்.

வெளிநாடுகளிலிருந்து வருகைதருவோர் தொடர்பில் உடனடியாகப் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதும் அதனை முன்னிறுத்தி மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளில் முக்கியமானதாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.