சப்புகஸ்கந்தவில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட விவகாரம்: பிரதான சந்தேகநபர் கைது!

சப்புகஸ்கந்த பிரதேசத்தில் அண்மையில் பயணப்பையொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வெல்லம்பிட்டியவில் உள்ள வீடொன்றில் தலைமறைவாகியிருந்த நிலையில் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம், தொடர்பில் ஏற்கனவே, மட்டக்குளி – சமித்திபுர பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பெண்ணின் சடலத்தை கொண்டுசென்றதாகக் கருதப்படும் பாரவூர்தியொன்றும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

சப்புகஸ்கந்த சஎண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் கடந்த 4 ஆம் திகதி பயணப் பையில் வீசப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான மொஹமட் ஷாபி பாத்திமா மும்தாஸ் என்று அடையாளம் காணப்பட்ட குறித்த பெண், ஒக்டோபர் 28 ஆம் திகதி பிற்பகல் தனது வீட்டிலிருந்து மற்றுமொரு பெண் மற்றும் ஆண் ஒருவருடன் முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில், கொலையுண்ட பெண் சூதாட்டத்தில் ஈடுபடுவதுடன் வட்டிக்கு பணம் கொடுப்பவர் என்பதும் தெரியவந்தது.

இதேவேளை, சப்புகஸ்கந்த, ப்ளூமெண்டல், மாளிகாவத்தை மற்றும் களனி பிரதேச குற்றத்தடுப்புப் பிரிவினர் இந்த மரணம் தொடர்பில் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

சம்பவ தினத்தன்று பிற்பகல் 3.00 மணியளவில் குறித்த பெண், ப்ளூமெண்டல் பகுதியைச் சேர்ந்த ரொசானா என்ற பெண் மற்றும் அவரது சகோதரர் எனக் கூறப்படும் நபர் ஆகியோருடன் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

பணத் தகராறு கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் பாத்திமா மும்தாஜ் கழுத்தை நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட பாத்திமா மும்தாஜின் சடலம், ரொசானாவின் வீட்டில் பயணப்பையில் வைக்கப்பட்டு, முழுமையாக மூடப்பட்ட பின்னர் பாரவூர்தியின் உதவியுடன் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள குப்பை கொட்டும் பகுதியில் கைவிடப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாத்திமா மும்தாஜ் கொலை வழக்கில் 36 வயதான ரொசானா மற்றும் அவரது கணவர் ஆகியோர் முன்னதாக கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் சப்புகஸ்கந்த காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் கடந்த 7 ஆம் திகதி மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.