முஸ்லிம்களுக்கு பல சட்டங்கள் இருப்பதால் அதனை ஒரு சட்டமாக்க விரும்புகிறேன் - ஞானசார தேரர் வெளியிட்ட தகவல்.

தேசவழமைச் சட்டத்தில் உள்ள நல்லதையும் அதேபோன்று கண்டியச் சட்டம், முஸ்லிம் சட்டம் ஆகியவற்றில் உள்ள நல்லதையும் பெற்று, சிறந்ததொரு சட்டத்தை ஏற்படுத்துவோமென, ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

“ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியும் பணிகள், நேற்று முன்தினம் (20), வவுனியா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நேற்று (21), யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தாம் ஒன்றுபட எந்த அரசியல்வாதிகளும் விரும்பவில்லை எனவும் ஆகவே, ஒரே நாடு ஒரே சட்டத்தையும் அவர்கள் விரும்பவில்லை எனவும் கூறினார்.

போதைப்பொருளால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் எனத் தெரிவித்த அவர், விளக்கேற்றுவதற்காக கேட்கும் அரசியல்வாதிகள், போதைப்பொருள் தடுப்பு மத்திய நிலையத்தை உருவாக்க தயாரில்லை என்றார்.

தமிழர்களது பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் என்ன செய்கிறார்கள் எனவும் வினவினார்.

“கடந்த 19ஆம் திகதியன்று, கார்த்திகை விளக்கீடு நிகழ்விலே பாதுகாப்பு தரப்பினர் தலையீடு செய்தமை தொடர்பில் அது சம்பந்தமான விளக்கத்தை நாம் பெறுவோம்.

ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியில் தமிழர்களை முதலில் சேர்க்காமல் எதிர்ப்புகள் வந்த பின்னர் சேர்த்தமை தொடர்பாக கேள்வியெழுப்பிய பொழுது, இந்த செயலணியை ஆரம்பித்த பொழுது பிரச்சினை ஒன்றாகவே இருந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் தமிழர்களை நியமிக்க வேண்டிய தேவையிருக்கவில்லை.

“பொதுவாகவே தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் ஓரே பிரச்சினையே காணப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களை தெரிவு செய்ய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.

முஸ்லிம்களுக்கு பல சட்டங்கள் இருப்பதால் அந்த சட்டத்தை பொதுச் சட்டத்தின் கீழ் கொண்டுவர விரும்பினோம். பல்வேறு சட்டங்கள் இருப்பதால் அதனை ஒரு சட்டமாக்க விரும்புகிறோம்” என்றார்.

தேசவழமைச் சட்டத்தில் உள்ள நல்லதையும் பெறவேண்டும் எனத் தெரிவித்த அவர், கண்டியச் சட்டம், முஸ்லிம் சட்டம் ஆகியவற்றில் உள்ள நல்லதையும் பெற்று சிறந்த சட்டத்தை ஏற்படுத்துவோம்.

எல்லா சட்டங்களிலும் இருக்கின்ற நல்ல விடயங்களை சேர்த்து ஒரே சட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் கூறினார்.

“கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்காக ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்க வேண்டும்” என்றார்.

இதன்போது, ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியின் உறுப்பினர்களான யோகேஸ்வரி பற்குணராஜா, ஜயம்பிள்ளை தயானந்தராஜா உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.