48 மணி நேரமும் நடந்தவை எவை? பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் வெளிவந்த தகவல்கள்!

கொழும்பு, வாழைத்தோட்டம் சிறுமிகள் மூவரும் நடன தாரகைகளாக ஜொலிக்கும் நோக்கிலேயே வீட்டை விட்டு வெளியேறிச் சென்றதாக பொலிசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் மோதிரங்களை அடகு வைத்து ஜீன்ஸ், ரீ சேர்ட்டுக்களை வாங்கி அணிந்துள்ளனரென்ற தகவலும் தெரியவந்துள்ளது.

அவர்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், காணாமல் போயிருந்தனர். இந்த விடயமானது நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதுவே ஊடகங்களில் பரபரப்பான செய்தியாக வெளிவந்து கொண்டிருந்தது. மூவரும் காணாமல் போனதையடுத்து பொலிஸாரால் தேடப்பட்டனர். பொலிசார் இந்த விடயத்தில் பெரும் கரிசனை எடுத்து விசாரணைகளை மேற்கொண்டனர். கொழும்பு 12 ஐச் சேர்ந்த மூன்று சிறுமிகளும் 48 மணி நேரத்தின் பின்னர் வீடு திரும்பியிருந்தனர்.

அவர்கள் வீட்டிலிருந்து அவ்வாறு எவருக்கும் தெரியாமல் செல்லக் காரணம் என்னவென்பது பொலிஸ் விசாரணைகளில் தற்போது வெளிப்பட்டுள்ளது.

வீடு திரும்பிய மூன்று சிறுமிகளும் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு, அங்கு வைத்து அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

தாங்கள் எதிர்க்காலத்தில் நடனத் தாரகைகளாக ஜொலிக்கும் நோக்கில் நடனம் பயில்வதற்கான ஆசையில் வீட்டை விட்டு இவ்வாறு வெளியேறியதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலை பொலிஸ் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இஸ்லாமிய குடும்பச் சூழலில் வளர்ந்த இந்த மூன்று சிறுமிகளும் இசை மற்றும் நடனம் மீது கொண்ட ஆவலால், தமது கனவுகளை மெய்ப்பிக்க இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறியதாக பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். அம்மூவரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இந்தச் சிறுமிகள், சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

'இந்த மூன்று சிறுமிகளுக்கும் எந்தப் பிரச்சினைகளும் இல்லை எனத் தெரிகிறது. எனினும் அதனை உறுதி செய்து கொள்வதற்காக நாம் அவர்களது உள, உடல் ரீதியிலான ஆரோக்கியத்தை உறுதி செய்யவென சட்ட வைத்திய அதிகாரியின் ஆய்வுக்கு அவர்களை உட்படுத்தியுள்ளோம். சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பின்னர் மேலதிக நடவடிக்கைகள் அவசியமாக இருப்பின் அது தொடர்பில் செயற்பட தயாராகவே உள்ளோம்’ என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறினார்.

இச்சம்பவம் தொடர்பான விபரங்கள் வருமாறு:

கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் கடந்த 8 ஆம் திகதி திங்கள் முதல் காணாமல் போயுள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் கடந்த 8 ஆம் திகதி திங்களன்று முறையிடப்பட்டுள்ளது. காணாமல்போன மூன்று சிறுமிகளில் இருவரின் தாயார் செய்த இந்த முறைப்பாட்டுக்கு அமைய விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் 9 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான் புத்திக் சி ராகலவுக்கு 'பி' அறிக்கை ஊடாக அறிவித்தனர்.

வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பமுனு ஆரச்சி, சிறு முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரத்னகுமார, குற்ற விசரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உடுவெல்ல மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜி.பி. ரம்யசிறி ஆகியோர் உள்ளடங்கிய விசேட குழுவினர் ஊடாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அத்துடன் கொழும்பு மத்தி சிறுவர் மற்றும் மகளிர் விசாரணைப் பிரிவும் விசாரணைகளில் இணைந்தது.

தமது கையடக்கத் தொலைபேசியுடன், இந்த சிறுமிகள் மூவரும் 8 ஆம் திகதி பயணப் பைகளையும் சுமந்த வண்ணம் முச்சக்கர வண்டி ஒன்றில் காலை 8.00 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறுகின்றமை சி.சி.ரி.வி காணொளிகள் ஊடாக தெரியவந்தது. அவர்கள் தொடர்பில் தகவல்களும் இல்லை என சிறுமிகளின் தாயார் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மார்டின் குறுக்கு வீதி, கொழும்பு 12 சேர்ந்த காணாமல் போன இரு சிறுமிகளின் தயாரான மொஹம்மட் பாரிஸ் பாத்திமா நஸ்ரினா எனும் தாயே இவ்வாறு முறைப்பாடு அளித்திருந்தார். 14,15 வயதான சிறுமிகள் தனது மகள்மார் எனவும் 13 வயது சிறுமி கம்பளையைச் சேர்ந்த தனது மூத்த சகோதரரின் மகள் எனவும் முறைப்பாட்டில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, சி.சி.ரி.வி. காணொளிகளை ஆராய்ந்து பார்த்ததாகவும், அதன் போது குறித்த சிறுமிகள் 8 ஆம் திகதி முற்பகல் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவிலிருந்து அருகிலுள்ள உணவகம் ஒன்றுக்குச் சென்று உணவு அருந்தியுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றுக்குத் தெரிவித்திருந்தனர்.

சிறுமிகளின் கைகளில் இருந்த தாயாரின் கையடக்கத் தொலைபேசிகளை ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் ஊடாக பின்தொடர்ந்து தேடிய போது, அவர்கள் 8 ஆம் திகதி காலிமுகத்திடலில் இருந்தமை தெரியவந்தது. அதன் பின்னர் அவர்களது கையடக்கத் தொலைபேசிகள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக மேலதிக தேடலில் தெரியவந்ததாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தனர்.

சிறுமிகளின் கைகளில் 1,800 ரூபா மட்டுமே பணம் இருந்துள்ளதாகவும், அவர்கள் வேறு எந்த பொருளையும் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லவில்லை என்பதும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்ததாக இதன் போது பொலிசார் குறிப்பிட்டிருந்தனர்.

இவ்வாறான நிலையிலேயே 9ஆம் திகதி இரவு இந்த சிறுமியர் மூவரும் மீண்டும் தமது வீட்டுக்குத் திரும்பியிருந்தனர். இதனையடுத்து பொலிஸார், தமக்கு அளிக்கப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கு அமைய அந்த சிறுமியருக்கு காணாமல் போயிருந்த 48 மணி நேரத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்கு விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களை பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.

“நவம்பர் 8 ஆம் திகதி காலையில் இந்தச் சிறுமிகள் வீட்டுக்கு தெரியாமல் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். நடன வகுப்பு ஒன்றில் சேர்ந்து நடன தாரகையாக ஜொலிக்க வேண்டும் எனும் ஆசையில் அவர்கள் இவ்வாறு இரகசியமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறியுள்ளனர்.

அவர்களிடம் பணம் பெருமளவில் இருக்காத நிலையில், அணிந்திருந்த சுமார் ஒரு பவுண் நிறையுடைய இரு மோதிரங்களை அடகு வைத்துள்ளனர். அதன் ஊடாக 60 ஆயிரம் ரூபாவைப் பெற்றுள்ளனர். அந்தப் பணத்தில் ஆடையகம் ஒன்றுக்குச் சென்று தமக்கு தேவையான ஜீன்ஸ் மற்றும் ரீ சேட்டுக்களை கொள்வனவு செய்துள்ளனர். அவர்கள் அணிந்திருந்த கலாசார ஆடைகளுடன் நடன வகுப்பில் சேர்வது சாத்தியம் இல்லை என்பதால் அவ்வாறு வேறு சாதாரண ஆடைகளை கொள்வனவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிறுமிகள் மூவரும் தமது கனவுகள், இலட்சியத்தை அடைய தன்னிச்சையாக இவ்வாறு செயற்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய குடும்பச் சூழ்லில் வளர்ந்துள்ள அவர்கள் இசை, நடனம் தொடர்பில் ஏற்பட்ட ஆவலில் இவ்வாறு தமது இலட்சியங்களை தன்னிச்சையாக செயற்படுத்த முனைந்துள்ளதாக தெரிகிறது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

விசாரணை அதிகாரி ஒருவரின் தகவல்கள்:

ஆடைகளை கொள்வனவு செய்த சிறுமிகள், அந்த ஆடைகளை அணிந்தவாறு வத்தளை பகுதிக்குச் சென்று அங்கு வைத்து நடன வகுப்பு ஒன்றில் சேர முயற்சித்துள்ளனர். எனினும் அந்த முயற்சி பயணளிக்காத நிலையில், அவர்கள் அங்கிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற பஸ் வண்டியில் அநுராதபுரத்துக்குச் சென்றுள்ளனர்.

அநுராதபுரம் பஸ் நிலையத்தில் இந்த மூன்று சிறுமிகளின் பின்னால் இளைஞர் குழுவொன்று வட்டமிட்டுள்ள நிலையில், அதனை அவதானித்த பஸ் வண்டி சாரதியும் நடத்துனரும் அச்சிறுமிகளிடம் செல்ல வேண்டிய இடம் தொடர்பில் விசாரித்துள்ளனர்.

இதன் போதே வீட்டுக்குத் தெரியாமல் அச்சிறுமிகள் புறப்பட்டு வந்துள்ளமை தெரியவந்தது. மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ் வண்டி ஒன்றில் அம்மூவரையும் பத்திரமாக ஏற்றி அந்த சாரதியும் நடத்துனரும் அவர்களை இடையில் எங்கும் இறக்காமல் கொழும்பில் இறக்கி விடுமாறும் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கொழும்பை வந்தடைந்த அவர்கள், ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவுக்குச் சென்று அங்கிருக்கும் யாராவது அதிகாரிகளைச் சந்திக்க அனுமதி கோரியுள்ளனர்.

அதற்கு பாதுகாப்பு அதிகாரி இடமளிக்காத நிலையில், அருகில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்துக்கு சென்று அங்கு சஜித் பிரேமதாசவை சந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். தமது இலட்சியத்தை அடைய அவர்கள் ஏதேனும் உதவிகளைப் பெற இவ்வாறு சென்றிருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அங்கு சஜித் பிரேமதாச இருக்காத நிலையிலேயே அவர்கள் பின்னர் தமது வீட்டை அண்மித்த உறவினர் ஒருவரின் வீட்டுக்கு வந்து அங்கிருந்து தங்களது வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

இதனையடுத்தே இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் பொலிஸார் சிறுமிகளை அழைத்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.(TK)

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.