வரவு செலவுத் திட்டம் 2022: அரசாங்கத்தின் புதிய முன்மொழிவுகள், திட்டங்கள் முழுமையாக இதோ...!

உற்பத்திப் பொருளாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற அலுவல்கள் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பமான நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரும் இன்றைய அமர்வில் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த வரவு செலவுத் திட்டமானது இலங்கை ஜனநாயக சோசஷலிச குடியரசின் 76 ஆவது வரவு செலவுத் திட்டமாகும்.

இதன்படி, நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஸ இன்று தனது கன்னி வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

இதற்கமைய, அடுத்த வருடத்தில் நாட்டின் மொத்த வருமானமாக இரண்டாயிரத்து 284 பில்லியன் ரூபா நிதி எதிர்பார்க்கப்பட்டுள்ளது

அத்துடன், மொத்த செலவாக மூவாயிரத்து தொள்ளாயிரத்து 12 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, துண்டு விழும் தொகையாக ஆயிரத்து 628 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, சர்வதேச ரீதியில் பல்வேறு நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதாக நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி, ஆசிரியர் – அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், மேலதிகமாக 30 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, இயற்கை உரங்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நடவடிக்கைகள் கிராம மட்டத்தில் மேற்கொள்ளப்படும் எனவும், விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு சிறந்த விலைகளைப் பெற்றுக் கொடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், விவசாயத் துறையில் காணப்படுகின்ற அபாய நிலைகளைக் குறைப்பதற்காக, உரிய தீர்வுகள் முன்வைக்கப்படும் எனவும், விவசாய தொழிநுட்பத்தைக் கொண்டுவருவதற்காக, 35 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

மேலும், அதிக இரசாயண பாதிப்பற்ற பூச்சிக் கொல்லி நடவடிக்கைகளுக்காக நான்காயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்காக, இரண்டு ஹெக்டேயருக்கு மேற்படாத நிலங்களில், ஒரு ஹெக்டேருக்கு 5000 ரூபாய் மானியம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

அத்துடன், விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில், பசுமை விவசாய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

பால் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் திரவப் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, கணக்காய்வு சட்டமூலத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக, மேலும் ஆயிரம் மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிகரெட் மீதான வற் வரி அதிகரிக்கப்படவுள்ளதாகவும் இதனால் சிகரெட் ஒன்றின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்படும் எனவும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், உடன் அமுலாகும் வகையில் மதுவரி அதிகரிக்கப்பட்டு, 25 மில்லியன் ரூபா வருமானத்தை பெற எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணப் பொதியை வழங்குவதற்காக 15,000 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வு பெறும் காலத்தினை 10 வருடங்கள் வரை நீடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவில், மாதாந்தம் ஐந்து லீட்டர் எரிபொருளினை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

அத்துடன், அரச நிறுவனங்களின் தொலைபேசிக் கட்டண செலவினை 25 வீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,

இதனிடையே, அரச துறைகளில் பணிபுரிவோரின் ஓய்வு பெறும் வயது 65 ஆக நீடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, ஏற்கனவே பணியமர்த்தப்பட்ட அனைத்துப் பட்டதாரிகளுக்கும் ஜனவரி மாதம் முதல் நிரந்த நியமயனம் வழங்கப்படும் எனவும், இதற்காக ஏழாயிரத்து 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, லயன் வீடுகள் மூன்று வருடங்களில் அகற்றப்படும் எனவும் , லயன்களில் வசிக்கும் மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கு 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், காணாமல் போனவர்களுக்கு இழப்பீடு வழங்க மேலும் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

இதேவேளை, சிறு தொழிலாளர்கள் முதல் பாரிய அளவிலான தொழில்களை மேற்கொள்ளும் நபர்கள் வரை, அனைவருக்கும் உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

அத்துடன், தகவல் தொழிநுட்ப சேவையை மேலும் விரிவுபடுத்துவதாகவும், பொருட்கள் ஏற்றுமதிக்காக விசேட வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஸ இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் அரச அலுவகங்களைத் தவிர்த்து, புதிய அலுவலகங்களை நிர்மாணிக்கும் பணிகள், இரண்டு வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அரச சேவையாளர்களின் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உரிய திட்டங்கள் வகுக்ப்பட்டுள்ளதாகவும், நியதிமைச்சர் பெசில் ராஜபக்ஸ இதன்போது குறிப்பிட்டார்.

பழங்கள், மரக்கறிகள், மீன் , திரவ பால் உற்பத்தி மற்றும் பயிர்ச்செய்கை பிரச்சனைகளை மீளாய்வு செய்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தையினை இலக்காக கொண்டு, உற்பத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஆடைத் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்கள் உற்பத்தி மற்றும் குறித்த பொருட்களை ஊக்குவிப்பதன் மூலம் சர்வதேச சந்தையில் புதிய முயற்சிகளை முன்னெடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இறப்பர் சார்ந்த உற்பத்திகளின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், இறப்பர் சார்ந்த உற்பத்தித் தொழிலை ஊக்குவிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மின் மற்றும் இலத்திரினியல் உபகரணங்களுக்கான உற்பத்தி மூலப்பொருட்களைக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி உபகரணங்களை உள்நாட்டில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன். ஏற்றுமதி பொருட்களை அபிவிருத்தி செய்வதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு 5000 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

அத்துடன். சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு வசதிகளை வழங்குவதற்காக 5,000 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கோவிட் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாடசாலைகள் மூடடைப்பட்டமையின் ஊடாக, பாடசாலை போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் வாகன உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட நட்டத்திற்காக, சலுகைகளை வழங்குவதற்காக 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

அத்துடன், கோவிட் அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு 700 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,

மேலும், தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு வழங்க 1500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ரயில் துறைக்காக 2000 மில்லியன் ரூபாவை மேதிகமாக ஒதுக்குவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், பொலிஸ் துறைக்கு 500 மில்லியன் ரூபா நிதியை மேலதிகமாக ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, சிறைச்சாலைக் கைதிகளின் நலனுக்காக மேலும் 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

இதனிடையே, முதியோரின் நலன்புரி விடயங்களுக்காக மேலும் ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

அத்துடன், கர்ப்பிணி தாய்மார்களுக்காக 24 மாத காலத்திற்கு போசனைப் பொதிகளை வழங்க ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த 4000 மில்லியனுக்கு மேலதிகமாக மேலும் 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அரச அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கில் வழங்க 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

இதேவேளை, ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்படாத அரச ஊழியர்களின் வருடாந்த சம்பள அதிகரிப்பு தற்போதைய மதிப்பீட்டு அறிக்கையின்றி உரிய காலத்தில் வழங்கப்படும் எனவும் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நூறு மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.

இதேவேளை, விபத்துக்குள்ளாகும் வாகனங்களுக்கு கட்டணம் விதிக்கப்படும் எனவும், காப்பீட்டில் இருந்து அப்பணத்தை மீட்டெடுக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன், ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் பெண் தொழில் முனைவோருக்கான வீட்டுக் கடைகளை அமைப்பதற்கு, 15,000 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

இதேவேளை, கிராமப்புற பாடசாலை மேம்பாட்டுக்காக 5300 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, விளையாட்டுத் துறைக்காக 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், சுகாதாரத் துறைக்கு மேலும் 5000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, நீர்ப்பாசன மேம்பாடு மற்றும் பாதுகாப்பு என்பவற்றுக்கு 2000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

இதேவேளை, வனப்பாதுகாப்புக்காக மேலதிகமாக 2000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, நீதித்துறை செயல்பாட்டில் ஏற்படும் தாமதங்களைத் தடுத்து, திறமையின்மைகளைத் தவிர்ப்பதுடன், நீதித்துறை செயன்முறையை டிஜிட்டல் மயமாக்க மேலும் 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

இதேவேளை, விசேட தேவையுடையவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஸ இதன்போது குறிப்பிட்டார்.

தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளின் ஒதுக்கீடு திறந்த ஏல செயன்முறையின் மூலம் நடைபெறும் எனவும், அலைவரிசைகள் பொதுச் சொத்தாகக் கருதப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு Coverage-ஐ நிறுவுவதற்கான செயல்முறையை விரைவுபடுத்துதல் மற்றும் நாட்டில் உள்ள 10,000 பாடசாலைகளுக்கு Fiber Optic அதிவேக இணையத்தை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்ப்டுள்ளது

இதேவேளை, நாட்டில் இனி பயங்கரவாதத்திற்கு இடமில்லை எனவும், உலகின் நிலையான நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் எனவும் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

இதனிடையே, மத்திய வங்கியின் முறிகள் மோசடி விவகாரத்தில், பேர்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் முறைகேடாக பெற்றுக் கொண்ட 8.5 மில்லியன் ரூபா நிதி, திறைசேரிக்கு பெற்றுக் கொள்ளப்படும் எனவும் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்

அத்துடன். நகர அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஏழாயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, 2000 மில்லியனுக்கும் அதிகமான வருடாந்த வருவாயைக் கொண்ட 62 நிறுவனங்களுக்கு ஒரு முறை மாத்திரம் அறவிடும் வகையில் 25 சதவீத வரியை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் பின்னர், நாடாளுமன்ற அமர்வு நாளை முற்பகல் 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.