அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் கையை விரிக்கும் அரசாங்கம்.

சர்வதேச சந்தையில் பொருட்களில் விலை அதிகரித்துள்ள காரணத்தினால் இலங்கைக்கு இறக்குமதி செய்யும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றங்களை செய்ய எம்மால் முடியாதுள்ளது என அரசாங்கம் தெரிவிக்கின்றது.

மக்களுக்கு சிரமங்களை கொடுக்காது அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க அரசாங்கம் எவ்வளவோ முயற்சிகளை எடுத்தும் அவற்றில் தோல்வி கண்டுள்ளோம் எனவும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் கூறுகின்றனர்,

பால்மா, எரிவாயு, சீனி, கோதுமை மா மற்றும் சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பு ஏற்படவுள்ள நிலையில் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு அலைகளை இது உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் அரசாங்கம் துரிதமாக ஏதேனும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமா என வினவியபோது சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இது குறித்து தெரிவிக்கையில்,

உலகளாவிய ரீதியில் கொவிட் வைரஸ் பரவல் நிலைமையினால் சகல நாடுகளும் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடி நிலைமைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அவ்வாறான நிலையில் இலங்கை போன்ற நாடுகளில் நிலைமை என்னவாக இருக்கும் என்பதை புத்திசாலித்தனமாக சிந்தித்து பார்க்க வேண்டும். உலக சந்தையில் சகல பொருட்களின் விலை வேகமாக அதிகரித்துக்கொண்டுள்ளது.

எமது நாட்டில் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களில் பல இறக்குமதி செய்யப்படுகின்ற காரணத்தினால் சர்வதேச சந்தையின் விலைகளை எம்மால் கட்டுப்படுத்த முடியாது. அதேபோல் இறக்குமதி பொருட்களின் விலை நிர்ணயம் எமது கைகளில் இல்லை.

கடந்த காலங்களில் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை விரைவாக அதிகரித்துக்கொண்டே செல்கின்ற வேளையில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்ட நிலையில் இந்த நிலைமைகளை மாற்றியமைக்க அரசாங்கமாக நாம் முயற்சிகளை எடுத்தோம். விலை நிர்ணயம் ஒன்றினை உருவாக்கி மக்களை நெருக்கடிக்குள் தள்ளாது சமாளிக்க எம்மாலான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துப்பார்த்தோம்.

ஆனால் எம்மால் முடியவில்லை, மக்களுக்கு நெருக்கடி ஏற்படாத வகையில் செயற்படுத்தலாம் என நாம் எடுத்த தீர்மானங்கள் அனைத்துமே அரசாங்கத்தின் கையை மீறி சென்றது. அதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன.

பிரதாமாக நான் ஏற்கனவே கூறியதைப்போன்று சர்வதேச சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பு, அதேபோல் இறக்குமதியாளர்களின் கட்டுப்பாடுகள் மற்றும் தீர்மானங்கள் காரணமாக எம்மால் அரசாங்கமாக தீர்மானம் எடுக்க முடியாது போயுள்ளது.

இப்போது அரசாங்கம் விலை நிர்ணயத்தை நீக்கியுள்ளது என்பதற்காக இது நிரந்தர தீர்மானம் அல்ல. நிலைமைகள் சுமுகமாக மாறியவுடன் மீண்டும் அரசாங்கமாக தீர்மானம் எடுப்போம் என்றார்.

அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து தெரிவிக்கையில் :- இந்த நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் எரிவாயு, கனிய எண்ணெய், பால்மா ஆகியவற்றின் விலையை எம்மால் தீர்மானிக்க முடியாது.

இவற்றுக்கான விலையை சர்வதேச சந்தையில் தீர்மானிக்கப்படுகின்றது. சர்வதேச சந்தையில் இருந்து அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் வேளையில் இறக்குமதியாளர்கள் எடுக்கும் தீர்மானமே முக்கியமானதாக அமைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கூடிய விலையில் பொருட்களை கொள்வனவு செய்து இங்கு விலையை குறைப்பதென்றால் எம்மிடம் அலாவுதினீன் அற்புத விளக்கு இருக்க வேண்டும்.உண்மைகளை நாம் கூறுகின்றோம், அது சகலருக்கும் கசக்கின்றது. ஆனால் உண்மைகளை மாற்றியமைக்க முடியாது.

கொவிட் வைரஸ் பரவலை காரணம் காட்டி இரண்டு ஆண்டுகள் சகலரும் சும்மாவே இருந்தோம், இப்போது கடுமையாக கஷ்டப்பட்டே ஆகவேண்டும். 2022 வரவு செலவு திட்டத்தை நிதி அமைச்சர் முன்வைக்கவுள்ளார். இதில் தபோதைய பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

குறிப்பாக ஆசிரியர் சங்கங்களில் பிரச்சினை, உரம் பிரச்சினை அதேபோல் விலை உயர்வுகள் காரணமாக மக்கள் படும் கஷ்டங்கள் என்ற சகலதுக்கும் தீர்வுகளை எதிர்பார்க்க முடியும்.

எனினும் சகலரும் ஒன்றை நிலைவில் வைத்திருக்க வேண்டும், இன்று முழு உலக நாடுகளும் பொருளாதார ரீதியில் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் எம்மால் மாத்திரம் பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு செயற்பட முடியாது. எமக்கும் பல்வேறு சவால்கள் உள்ளன.

கடன் நெருக்கடி நிலைமைகளுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டியுள்ளது, தேசிய உற்பத்திகளில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளன, இறக்குமதிகள் தடுக்கப்பட்டுள்ளன, எண்ணெய் பிரச்சினைகள் உள்ளன இவற்றை எல்லாம் சமாளிக்க மக்களும் தியாகம் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.