`ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணி விவகாரம்: நீதியமைச்சர் அலி சப்ரி எடுத்து தீர்மானம்.

'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராகப் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடவுள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஊடகமொன்று வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மீள நாடு திரும்பியதன் பின்னர் இது குறித்துக் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் கடந்த 26 ஆம் திகதி விசேட வர்த்தமானி மூலம் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இலங்கை அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டது.

இந்தச் செயலணியின் உறுப்பினர்களாக, பேராசிரியர் தயானந்த பண்டார, பேராசிரியர் சாந்திநந்தன விஜேசிங்க, பேராசிரியர் சுமேத சிறிவர்த்தன, என். ஜி. சுஜீவ பண்டிதரத்ன, சட்டத்தரணி இரேஷ் செனெவிரத்ன,
சட்டத்தரணி சஞ்ஜய மாரம்பே, எரந்த நவரத்ன, பாணி வேவல, மௌலவி மொஹமட், விரிவுரையாளர் மொஹமட் இந்திகாப், கலீல் ரஹுமான், அஸீஸ் நிசார்தீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையினுள் 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதைச் செயற்படுத்துதல் தொடர்பாகக் கற்றாராய்ந்து அதற்காகச் சட்ட வரைவு ஒன்றைத் தயாரித்தல் இந்தச் செயலணிக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நீதி அமைச்சினால் இதுவரை இதற்குரியதாகத் தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவுகள் மற்றும் திருத்தங்களைக் கற்றாராய்ந்து, அவற்றின் பொருத்தப்பாடு மற்றும் தகுந்த திருத்தங்கள் இருப்பின் அதற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தலும், ஏற்றவாறு உரிய வரைவில் உள்ளடக்குதலும் இந்தச் செயலணிக்கு பொறுப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த செயலணி இந்த வாரம் முதற்தடவையாகக் கூடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராகப் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமைக்கு மௌலவிகள், நீதியமைச்சர் அலி சப்ரியிடம் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.