அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து வர்த்தகத்துறை அமைச்சரின் அறிவிப்பு.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை அரசாங்கமாக எம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனினும் வியாபாரிகள் முன்வைத்த விலைப்பட்டியலை விடவும் குறைந்த விலையிலேயே விலை அதிகரிப்பை மேற்கொள்ள அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கடந்த கால கொவிட் நிலைமைகள், நாட்டை முடக்கியமை மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கான விளைவுகளுக்கு இப்போது சகலரும் முகங்கொடுத்தாக வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஒரே சந்தர்ப்பத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் அதிருப்தி மற்றும் எதிப்பு வெளிப்பாடுகள் ஊடகங்களில் வெளிப்பட்டுக்கொண்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயம் ஒன்றினை கையாளவோ அல்லது விலை கட்டுப்பாட்டை மேற்கொள்ளவோ அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து வினவிய போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் வைரஸ் தொற்றுப்பரவலை அடுத்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் சகல பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

இவற்றில் அத்தியாவசிய பொருட்களான எரிவாயு, இரசாயன உரம், பால்மா, மருந்து பொருட்கள், எரிபொருள் என்பன நூலறுந்த பட்டம் போன்று ஒரேடியாக விலை உயர்வை வெளிப்படுத்தியுள்ளது. ஆகவே இப்போது நாம் பொருளாதார ரீதியில் மிகவும் கடினமான பயணமொன்றை முன்னெடுத்து வருகின்றோம்.

அரசாங்கத்திடம் பணம் இல்லை, முதலீடுகளுக்கான வாய்ப்புகள் இன்னமும் ஏற்படவில்லை, உள்நாட்டு உற்பத்தியில் பாரிய சாதகத்தன்மையும் ஏற்படவில்லை. இவ்வாறான நிலையில் எம்மால் எதனையும் செய்ய முடியாதுள்ளது. 

இறக்குமதியின் போது எம்மால் விலை நிர்ணயத்தை மேற்கொள்ள முடியாதுள்ளது, வியாபாரிகளும் சிரமங்களுக்கு மத்தியிலேயே இறக்குமதிகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களுடன் நாம் தொடர்ச்சியாக கலந்துரையாடி வருகின்றோம்.

எரிவாயு, பால்மா போன்றவை இப்போதும் நட்டத்திலேயே இறக்குமதி செய்யப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்ல நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்து எம்முடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த வேளையில் அவர்கள் ஆரம்பத்தில் கூறிய விலையை விடவும் குறைவாகவே விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என நாம் வலியுறுத்தி அதற்கமையவே இப்போது பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

அவர்களின் நிலைப்பாட்டில் இருந்து அவர்கள் முன்வைத்த விலை பட்டியலுக்கு அமைய விலையேற்றம் செய்திருந்தால் இன்று நாட்டில் பாரிய குழப்பங்களே ஏற்பட்டிருக்கும் என நான் கருதுகின்றேன்.

அதேபோல் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றை இறக்குமதி செய்ய அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. அதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அமைச்சரவை கூட்டத்திலும் இந்த காரணிகளை நாம் ஆராய்வோம். அதுமட்டுமல்ல அரச வங்கிகள் மூலமாக கடன்களை கொடுத்து தேசிய வியாபாரிகளை ஊக்குவிக்கும், பலப்படுத்தும் வேலைத்திட்டங்களையும் எதிர்காலத்தில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில் பொருட்களில் விலை அதிகரிப்பினால் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்பதை நாம் மறுக்கவில்லை. எனினும் கொவிட் காலத்தில் தடுப்பூசிகளுக்காக அளவுக்கு அதிகமான பணம் செலவானது.

அதேபோல் நாடு முடக்கப்பட்டு பொருளாதார வருவாய்கள் இல்லாத நிலையொன்று உருவாகியது. பொருளாதாரமா மக்களின் உயிரா என்ற கேள்வியை கேட்டு நாட்டை முடக்க பலர் வலியுறுத்தினர். அப்போதே எதிர்காலத்தில் இவ்வாறான நெருக்கடி நிலையொன்று உருவாக்கும் என நாம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தோம்.

ஆகவே இப்போது சகலரும் தியாகங்களை செய்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.