நாட்டை திறப்பது தொடர்பான நிபுணர்களின் பரிந்துரை நாளை ஜனாதிபதியிடம் - இராணுவத் தளபதி வெளியிட்ட புதிய தகவல்.

எதிர்வரும் 21ஆம் திகதியுடன் நாட்டை சுகாதார கட்டுப்பாடுகளுடன் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் சாத்தியப்பாடுகள் அதிகமாக உள்ளதாகவும், நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தலைமையில் கூடும் கொவிட் கட்டுப்பாட்டு செயலணி கூட்டத்தில் சுகாதார, வைத்திய அதிகாரிகளின் பரிந்துரைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் எனவும் கொவிட் செயலணியின் பிரதானி இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீக்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்ற நிலையில், செயலணியின் தீர்மானம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவே நாடு நான்கு வாரங்கள் முடக்கப்பட்டது. நீண்ட கால முடக்கமாகவே இதனை நாம் கருதுகின்றோம். தற்போது வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்துள்ளது. ஆனால் இரண்டாயிரத்திற்கு அதிகமான தொகையாகவே தரவுகளில் வெளிப்படுகின்றது. அதேபோல் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும் நூற்று ஐம்பதற்கு அண்ணளவான தொகையாக பதிவாகிக்கொண்டுள்ளது. ஆகவே இவ்வாறான நிலைமைகளையும் நாம் கருத்தில் கொள்கின்றோம்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தலைமையில் கூடிய கொவிட் கட்டுப்பாட்டு செயலணிக்கூட்டத்தில் நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் எவ்வளவு காலத்திற்கு நீட்டிப்பது என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டது. அதற்கமையவே எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீட்டிக்கவும் அதன் பின்னர் நாட்டை திறக்க முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார். அதற்கமைய சுகாதார வைத்திய தரப்பின் பரிந்துரைகளை அவர் முன்வைக்குமாறும் வலியுறுத்தியிருந்தார்.

நாடு திறக்கப்படுவதற்கு முன்னர் வலுவான சுகாதார வழிமுறைகளை நடைமுறைப்படுத்தியாக வேண்டும் என சுகாதார தரப்பினர் கூறியுள்ளனர். அதற்கமைய அவர்களின் பரிந்துரைகள் சுகாதார பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (நாளை) ஜனாதிபதி தலைமையில் கூடும் கொவிட் கட்டுப்பாட்டு செயலணிக்கூட்டத்தில் சுகாதார பணிப்பாளரினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும். அதற்கமையவே தீர்மானங்கள் எடுக்கப்படும்.

கடுமையான சுகாதார கட்டமைப்புடன் நாடு கட்டம் கட்டமாக திறக்கப்படலாம். ஆரம்பத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதன் பின்னர் ஏனைய செயற்பாடுகளை கட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்க அனுமதிக்கப்படும் என்றே நாம் கருதுகின்றோம்.

எவ்வாறு இருப்பினும் சுகாதார தரப்பினர் செயலணிக் கூட்டத்தில் முழுமையான காரணிகளை முன்வைத்த பின்னர் சகல தகவல்களையும் அறிவிப்போம் என்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.