நாட்டில் தற்போது அமுலாகியுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கடந்த 4 வாரங்களாக நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.
அடுத்த வாரம் முதல் நாட்டை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறந்து பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தடுப்பூசி வழங்கல் மற்றும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய அந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எப்போது நீக்கப்படும் என்பது தொடர்பில் கொவிட் – 19 ஒழிப்பு செயலணிக் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படும் – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது, நாட்டில் தற்போது உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எப்போது தளர்த்தப்படும் என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
"தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை அமுலில் இருக்கும். மாற்றம் இருப்பின் அது குறித்து அறிவிக்கப்படும். தனிமைப்படுத்தல் ஊரடங்கால் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரண எண்ணிக்கை குறைவடைந்துள்ளன.” -என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Post a Comment