அத்தியாவசிய சேவைகளை தங்குதடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் நாடு முழுவதும் அவசரகால சட்டத்தின் சில பிரிவுகளை நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இந்த நிலையில் இதற்கான அதிவிசேட வர்த்தமானி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் பி.பி ஜெயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலையில் மக்களுக்கான சேவைகளை தங்குதடையின்றி வழங்கவும், இயல்பு நிலையை முன்னெடுக்கவும், சட்டம் மற்றும் அமைதியை நிலைநாட்டி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவசரகால சட்ட சில பிரிவுகளை அமுல்படுத்தும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் அல்லது மக்களின் இயல்பு வாழ்க்கையினை சீர்குலைப்போர் மீது இதனடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அறியமுடிந்தது. அவசரகால சட்டத்தின் ஒழுங்குகளுக்கு நாடாளுமன்றத்தில் அங்கீகாரத்தினை பெற அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment