நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா? அல்லது 30ம் திகதியுடன் தளர்த்துவதா? என்பது தொடர்பில் இன்றைய தினம்(27) தீர்மானம் எட்டப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.
கொவிட் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி இன்றைய தினம்(27) கூடி, இந்த விடயம் தொடர்பில் ஆராயவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பதிவாகின்ற கொவிட் தொற்றாளர்கள் மற்றும் பதிவாகின்ற கொவிட் மரணங்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே, இன்றைய தினம் இந்த தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து இதுவரை எவ்வித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை, 30ம் திகதிக்கு பின்னர் நீடிக்க கூடாது என்பதே, தனது தனிப்பட்ட கருத்து என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நேற்று(26) தெரிவித்திருந்தார்.
நாட்டை முடக்கி, கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்பதனை, உலகிலுள்ள அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
Post a Comment