நாடளாவிய ரீதியில் தொலைதொடர்பு சேவையில் உள்ள வலைப்பின்னல் பிரச்சினைக்கு இரண்டு வருட காலத்திற்குள் தீர்வு காண எதிர்பார்த்துள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும் டிஐிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஐாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இணையவழி கற்றல் முறைமையினை பெற்றுக் கொள்ளும் போது பெரும்பாலான மாணவர்கள் பல நெருக்கடிகளை எதிர்க்கொள்கிறார்கள். இவற்றில் வலைப்பின்னல் பிரச்சினையை குறிப்பிட வேண்டும்.
எனவே இரத்தினபுரி, மாத்தறை மற்றும குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இம்மாதம் தொலைத்தொடர்பு வலைப்பின்னல் கோபுரங்களை அமைக்க தீர்மானித்துள்ளோம். இவ்வருடத்திற்குள் 10 மாவட்டங்களில் உள்ள தொலைத்தொடர்பு வலைப்பின்னல் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.
அதற்கிடையிலும் இணையழி கல்வியினை பெற முடியாத மாணவர்களின் கற்றல் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தொலைக்காட்சி சேவையின் ஊடாக கற்றல் நிகழ்ச்சிகளை அதிகரிக்க உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ வலைத்தளத்தின் ஊடாக நாளை 25 பாடசாலைகளை ஒன்றிணைத்து காணொளி முறைமை ஊடாக கற்றல் நடவடிக்கையினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ வலைத்தளத்தில் கற்றலில் ஈடுப்படுவதற்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது என்றார்.
Post a Comment