ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில், நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளட்ட வாழ்க்கை செலவு தொடர்பிலான அமைச்சரவை இணைக் குழுக் கூட்டத்திலேயே, எரிப்பொருள் விலையேற்றம் தொடர்பிலான இறுதித் தீர்மானம் எட்டப்பட்டதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
வலுசக்தி அமைச்சில் இன்று (13) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அமைச்சர் அவர் இதனைக் கூறியுள்ளார்.
எரிப்பொருள் விலையேற்றத்திற்கு வலுசக்தி அமைச்சு சுயேட்சையாக தீர்மானமொன்றை எட்ட முடியாது எனவும், அதற்கான அனுமதியை நிதி அமைச்சு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்பிரகாரம், வாழ்க்கை செலவு தொடர்பிலான அமைச்சரவை இணைக் குழுக் கூட்டத்தின் அனுமதியை, நிதி அமைச்சு அங்கீகரித்திருந்ததாகவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அனைவரது அனுமதியும் இன்றி, தனக்கு மாத்திரம் எரிப்பொருள் விலையை அதிகரிக்க முடியாது என்பதனை நாட்டிலுள்ள சாதாரண மக்களுக்கும் தெரியும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆலோசனைகளுக்கு அமைய செயற்பட்ட தன்னை, கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் பதவி விலகுமாறு கோரியமை குறித்து, ஆராய வேண்டியது நாட்டின் தேவை என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
Post a Comment