இலங்கை கடலுக்குள் மூழ்கி வரும் "எக்ஸ் பிரஸ் பர்ள்" கப்பல்; கடல் சூழலுக்கு பாரிய ஆபத்து; மீனவர்களுக்கும் எச்சரிக்கை!!!

ஆழ்கடலை நோக்கி இழுத்துச் செல்லப்பட்ட தீப்பிடித்த MV X-Press Pearl கப்பல் தற்போது கடலுக்குள் மூழ்கி வருவதாக, இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்த சிங்கப்பூருக்குச் சொந்தமான குறித்த கப்பலை, ஆழ்கடலை நோக்கி இழுத்துச் செல்ல உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விடுத்த உத்தரவுக்கமைய, இன்று (02) முற்பகல் அப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கை கடற்படையினரும் அக்கப்பலில் ஏறி அதற்கான பணிகளை முன்னெடுத்ததோடு, இலங்கை விமானப்படை அது தொடர்பான பணிகளுக்கு உதவியாக Bell 212 வகை ஹெலிகொப்டர் மூலம் வான் பரப்பில் அதனை கண்காணிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு உரிய பிரிவுக்கு அறிவித்தும் வந்தது.

இந்நிலையில் குறித்த கப்பலின் பின் பகுதி மூழ்கி வந்த நிலையில், தற்போது அது கடலின் அடியை தட்டி உள்ளதால் அதனை ஆழ்கடலுக்கு எடுத்துச் செல்லும் இழுவை பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக பாணந்துறை முதல் கொழும்பு ஊடாக கொச்சிக்கடை வரையான கடற் பிராந்தியத்தில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீன்பிடித் திணைக்களம் மீனவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. 

இந்த நிலையில் தற்போது வரை கப்பலில் எண்ணெய் கசிவுகள் எதுவும் தென்படவில்லை எனவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த கப்பல் தற்போது கடலில் மூழ்கிச் சென்றுக்கொண்டிருப்பதால் குறித்த கப்பலில் இருந்து பெருமளவான எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும், அவ்வாறு எண்ணெய் கசிவு ஏற்பட்டால், அதன் விளைவாக திக்வோவிட்ட பிரதேசம் முதல் நீர்கொழும்பு – கெபுன்கொட பிரதேசம் வரையிலான கடற்பகுதியில் எண்ணெய் படிமங்கள் மிதக்கக்கூடும் என்றும் கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கப்பலிலிருந்து வீழ்ந்த மற்றும் வெளியாகி கடற்கரையை வந்தடைந்த கழிவுகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை, இலங்கை விமானப்படையினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.