அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருட்களின் விலை மீள குறைக்கப்படுமானால் வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப்பெறுவதற்கு தயார் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச நாட்டில் இருந்திருந்தால் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு இடமளித்திருக்கமாட்டார் எனவும், அவர் நாடு திரும்பியதும் மக்களுக்கு நிச்சயம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் மொட்டு கட்சி உறுப்பினர்கள் அறிவித்து வந்தனர்.
தற்போது பஸில் ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார். எனவே, நிவாரணத் திட்டம் என்னவென்பதை அறிவிக்க வேண்டும் – என்று சஜித் அணி நாடாளுமன்ற உறுப்பினரான நிரோஷன் பெரேரா வலியுறுத்தினார்.
குறிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருட்களின் விலை மீள குறைக்கப்படுமானால் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப்பெறுவதற்கு நாம் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எப்போது விவாதத்திற்கு அனுமதிப்பது குறித்து அடுத்த கட்சித்தலைவர்கள் சந்திப்பில் தீர்மானிக்கப்படும் என்று சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் 06ஆம் திகதி கட்சித்தலைவர்கள் சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
Post a Comment