இன்று இரவு முதல் மீண்டும் பயணக் கட்டுப்பாடு; இராணுவத் தளபதி மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள செய்தி.

இன்று (23) இரவு 10 மணி முதல் நாடு பூராகவும் 30 மணித்தியால நடமாட்டக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

பொசன் பூரணை காரணமாக மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளது.

வார இறுதி நாட்களில் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை.

எதிர்வரும் சில நாட்களில், நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 20,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன்போது வழமைக்கு மாறாக அதிகளவான சோதனைச் சாவடிகள் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கடந்த மாதம் 21 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாடு கடந்த 21 ஆம் திகதி தளர்த்தப்பட்டிருந்த நிலையில், இரு தினங்களை அடிப்படையாக கொண்டு மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடு அமுல் படுத்தப்பட்டுள்ளது. இதன்போது கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக மாத்திரம் 20,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது பொலிஸ் சோதனைச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை மாகாண எல்லை பகுதிகளை இலக்கு வைத்தே ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படும் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவை மாத்திரமே இயங்கும்.

இதன்போது, அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஏனையவர்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும்.

மேலும் பொதுப்போக்குவரத்து சேவைகள் இயங்காது, வர்த்தக நிலையங்களும் திறக்கப்படமாட்டாது. இந்நிலையில் மக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இதேவேளை, பொசன் போயா விடுமுறை தினமான நாளை மத வழிபாடுகளில் ஈடுபடுபவர்கள் வீடுகளில் இருந்தவாறே வழிபாடுகளில் ஈடுபட முடியும். மதஸ்தலங்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.