கிரிந்தை கடல் பரப்பிலிருந்து 480 கடல் மையல்களுக்கு அப்பால் தீ விபத்துக்குள்ளான எம்.எஸ்.சி மெசீனா சரக்கு கப்பலில் ஏற்பட்டிருந்த தீப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், கப்பல் சிங்கபூர் நோக்கி பயணத்தை தொடர்ந்துள்ளது. எனினும் கப்பல் ஊழியர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கெப்படன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
கொழும்பு துறைமுகத்திலிருந்து கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் சிங்கபூர் நோக்கி பயணித்த எம்.எஸ்.சி மெசீனா சரக்கு கப்பலில் கடந்த வியாழக்கிழமை இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து , அந்த பகுதியிலுள்ள ஏனைய கப்பல்களுக்கு அவர்களுக்கு உதவி வழங்குமாறு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் , கிரிந்தை - மஹா இராவணன் கலங்கரை விளக்கத்திலிருந்து 480 கடல்மையல்களுக்கு அப்பால் பகுதியில் வைத்தே கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது. கப்பல் சர்வதேச கடல் எல்லையில் தீப்பற்றியிருந்தாலும், அது இலங்கையின் மீட்பு வலயத்துக்குள்ளேயே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. அதனால் இங்குள்ள ஏனைய சரக்கு கப்பல்களுக்கு அவர்களுக்கான உதவிகளை செய்யுமாறு நாம் தகவல் வழங்கியிருந்தோம்.
இதனைத் தொடர்ந்து குறித்த கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் , அதனை சிங்கபூர் நோக்கி எடுத்துச் செல்வதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்நிலையில் தீப்பரவல் காரணமாக கப்பலில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் கப்பல் ஊழியர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அது தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரையில் எமக்கு கிடைக்கவில்லை.
இதேவேளை , எம்.எஸ்.சி மெசீனா சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக நாட்டின் கடல் பிராந்தியத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டார்.
Post a Comment