பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மூலம் 12.5 கிலோ கிராம் எடை கொண்ட வீட்டுப் பாவனைக்கான சமையல் எரிவாயுவை, தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள 1,493 ரூபாவுக்கு விற்க, அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அதற்கமைய, இலங்கையில் சமையல் எரிவாயுவை விநியோகிக்கும், லிற்ரோ எரிவாயு கம்பனி மற்றும் லாஃப் எரிவாயு கம்பனி ஆகியன, சந்தையில் தொடர்ந்தும் குறித்த விலையில் சமையல் எரிவாயுவை விற்பனை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை உப குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையில் திரவப் பெற்றோலிய வாயு உற்பத்தித் துறையை மீள்கட்டமைத்தல் தொடர்பாக பரிந்துரைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வர்த்தக அமைச்சரின் தலைமையில் அமைச்சரவை உப செயற்குழுவொன்றை நியமிப்பதற்காக 2021 யூன் மாதம் 07 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எமது நாட்டில் வாயு உற்பத்தித் துறையில் ஈடுபடும் கம்பனிகளின் பிரதிநிதிகள், ஏற்புடைய அரச நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்துறை நிபுணர்களின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் உடன்பாடு எட்டப்பட்ட விடயங்களுக்கு அமைவாக அமைச்சரவை உப செயற்குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட கீழ்க்காணும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- பாவனையாளர் விவகாரங்கள் தொடர்பான அதிகாரசபை மூலம் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள 12.5 கிலோகிராம் எடை கொண்ட வீட்டுப் பாவனைக்கான எரிவாயுவை 1,493 ரூபாவுக்கு லிற்ரோ எரிவாயு கம்பனி மற்றும் லாஃப் எரிவாயு கம்பனி தொடர்ந்தும் சந்தையில் விற்பனை செய்தல்
- எரிவாயுக் கொள்வனவின் போது, போக்குவரத்து மற்றும் களஞ்சியப்படுத்தல் போன்றவற்றை இரு கம்பனிகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கும், அதற்காக அம்பாந்தோட்டை எரிவாயு முனையத்தைப் பயன்படுத்தல்
- நாட்டுக்கு தேவையான திரவப் பெற்றோலிய வாயு (LPG) கொள்வனவுக்கான பெறுகை நடவடிக்கைகள், போக்குவரத்து மற்றும் களஞ்சியப்படுத்தல் செயற்பாடுகளை முறையாக நடாத்திச் செல்வதற்காக லிற்ரோ எரிவாயு கம்பனி மற்றும் லாஃப் எரிவாயு கம்பனியின் பிரதிநிதிகள் அடங்கலாக குறித்த துறைசார் நிபுணத்துவ அறிவுகொண்ட உத்தியோகத்தர்களுடன் கூடிய குழுவொன்றை நியமித்தல்
- உப செயற்குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பொறிமுறையை எதிர்வரும் 06 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தி அதன் முன்னேற்றத்தின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கைகளை எடுத்தல்.
Post a Comment