நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதியும் பிரதமரும் விடுத்துள்ள விசேட அறிவிப்பு.

ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து இறைவன் அல்லது லாஹ் தங்களின் விருப்பங்களை ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையுடன் ஈதுல்-பித்ர் நோன்புப் பெருநாள் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இந்த ஈதுல் பித்ர் நன்னாளில் அவர்களின் அந்த அனைத்து நல்லெண்ணங்களும் ஈடேற வேண்டும் என நான் வாழ்த்துகிறேன்.

எந்தவிதமான அந்தஸ்த்து வேறுபாடுகளின்றி அனைவரும் ஒன்றாக ரமழான் மாதத்தில் ஒரு வளமான வாழ்க்கைக்காக அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக்கொள்வது ஒரு சமய மரபு என்ற போதிலும், அதன் சமூக பெறுமானம் போற்றத்தக்கதாகும். தமது வாழ்க்கையை பரிசுத்தப்படுத்திக்கொள்வதற்கும் சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்வதற்குமான ஒரு சிறந்த சந்தர்ப்பமாக முஸ்லிம்கள் ரமழானை கருதுகின்றனர். ரமழான் காலத்தில் வளர்ந்தவர்கள் செய்யும் நற்செயல்களின் பால் சிறுவர்களும் ஈர்க்கப்படுகிறார்கள்.

இன்று உலகம் எதிர்கொள்ளும் கோவிட் பேரழிவிலிருந்து உலக மக்களை பாதுகாக்க வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நோய்த்தொற்று நிலைமைகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே அனைத்து மக்களினதும் பிரார்த்தனையாகும். இதற்காக ரமழான் காலத்தை பயன்படுத்திக் கொள்வது பயனுடையதாக இருக்கும்.

சமூகங்களுக்கு இடையில் அமைதியையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்பி உலகுக்கு நாம் எடுத்துக் காட்டிய நல்லிணக்கம் முழு இஸ்லாமிய உலகிற்கும் ஒரு சிறந்த முன் உதாரணமாகும். புனித அல் குர்ஆனின் போதனைகளை பின்பற்றும் உண்மையான முஸ்லிம்கள் இந்த கூட்டு அர்ப்பணிப்பையும் திட உறுதியையும் மேலும் பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுடன் சேர்ந்து ஈத் பண்டிகையை கொண்டாடும் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது இனிய ஈதுல் பித்ர் நல்வாழ்த்துக்கள்.

ஈத் முபாரக்!

கோட்டாபய ராஜபக்ஷ
2021 மே மாதம் 13 ஆம் திகதி

பிரதமரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈதுல் ஃபிதர் திருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாத்தின் புனித நூலான அல்-குர்ஆனில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வகையில் அனுட்டிக்கப்படும் ஒரு மாத கால ரமழான் நோன்பின் மூலம், மத ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் உலகிற்கு மிக முக்கியமான செய்தி வெளிப்படுத்தப்படுகிறது.

நோன்பு காலத்தில் பிறரது பசி பற்றிய சரியான புரிந்துணர்வுடன், விட்டு கொடுப்பு மிகுந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப இஸ்லாமியர்கள் எவ்வித உயர்வு தாழ்வுமின்றி ஒன்றிணைவார்கள் என்பது எனது நம்பிக்கையாகும்.

மத ரீதியான முறையான போதனைகளை கற்ற ஒழுக்கம் மிகுந்த இஸ்லாமியர்கள் வரலாறு முழுவதும் இலங்கை சமூகத்தில் பிற இனங்கள் மற்றும் மதங்களுடன் ஒருவருக்கொருவர் மிகுந்த நட்புடன் செயற்பட்டுள்ளனர்.

இந்த நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தாமல் முன்னோக்கி செல்ல முஸ்லிம் மக்களுக்கு உள்ள அவசியத்தை ஒரு அரசாங்கமாக நாம் புரிந்துகொண்டுள்ளோம் என்பதையும் இன்று போன்றதொரு தினத்தில் நினைவுபடுத்த வேண்டும்.

உலகளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட் தொற்று நிலைமை காரணமாக கடந்த ஆண்டு போன்றே இந்த வருடமும் ஈதுல் ஃபிதர் சடங்குகளை பாரியளவிலான பண்டிகையாக கொண்டாட முடியாத போதிலும், இது சார்ந்த மத சடங்குகளை சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன். 

நோன்பு காலத்தில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய வழிபாட்டிற்காக பள்ளிவாசல்களுக்கு செல்லாது தமது வீடுகளில் இருந்தவாறு சமய சடங்குகளை மேற்கொண்டு வழிபாட்டில் ஈடுபட்ட அனைத்து இஸ்லாமியர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

முழு உலகமும் இவ்வாறானதொரு தொற்று நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள காலத்தில் ரமழான் நோன்பின் மூலம் அர்த்தப்படுத்தப்படும் மத விழுமியங்களை அனைவரின் நலனுக்காக பயன்படுத்துமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். 

உங்கள் அனைவருக்கும் இன்றைய ஈதுல் ஃபிதர் திருநாள் இறை ஆசீர்வாதத்துடனான, நோய் அச்சமற்ற அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த சிறந்த நாளாக அமைய பிரார்த்திக்கின்றேன்.

பிரதமர்
மஹிந்த ராஜபக்ஸ

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.