நாட்டில் பாம் எண்ணெய் இறக்குமதியினை முழுமையாக தடைசெய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானமானது பேக்கரி உற்பத்தி துறையில் தாக்கத்தை ஏற்படுத்துமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி பொருட்களுக்கு அத்தியாவசியமான வெண்ணெய், பாம் எண்ணெயினை பயன்படுத்தி தயாரிக்கப்படுவதனால், அதனை தடை செய்வதானது அனைத்து பேக்கரி பொருட்களிலும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துமெனவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தினை கடுமையாக எதிர்ப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், பேக்கரி உற்பத்திகளில் 75 வீதமான பொருட்களுக்கு பாம் எண்ணெய் பயன்படுத்தப்படுவதாகவும், பேக்கரி உற்பத்திகளுக்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெயினை பயன்படுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பாம் எண்ணெய் மீதான தடையினை மஞ்சள் இறக்குமதி செய்வதற்கான தடையுடன் ஒப்பிட முடியாது எனவும் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், பேக்கரி உற்பத்தியாளர்களின் தேவை பூர்த்திசெய்யப்படுவது உறுதிசெய்யப்பட்டதன் பின்னரே பொருத்தமான தீர்மானம் எட்டப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு இல்லை எனில் பேக்கரி உரிமையாளர்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்படுமெனவும் கில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உடன் அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதியை முழுமையாக தடை செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று அறிவித்தார்.
இதற்கு அமைவான வர்த்தமானி அறிவித்தலை வௌியிடுமாறு ஜனாதிபதியின் செயலாளரினால் ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment