எவ்வாறான தடைகள் மற்றும் விமர்சனங்கள் வந்தாலும் முன்னேறிச் செல்வேன் - ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு

நாட்டில் இன்று ஒரு தெளிவான கொள்கையும் திட்டமும் செயற்படுத்தப்படுகிறது. கடந்த அரசாங்கம் ஏற்படுத்திய பிரச்சினைகளை தீர்ப்பதிலேயே அரசாங்கத்தின் அதிக நேரம் செலவாகிறது. நீண்ட காலமாக மக்களை பாதித்து வரும் பிரச்சினைகளுக்கு முறையான அபிவிருத்தி மட்டுமே தீர்வு என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதற்கு தேவையான கொள்கை சட்டகத்தையும் நிகழ்ச்சித் திட்டத்தையும் அரசாங்கம் முன்வைத்துள்ளது. ஜனாதிபதியாக கிராமம் கிராமமாக செல்வதும் உண்மையான மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்ப்பதற்காகும். எத்தகைய கொள்கையோ திட்டமோ இல்லாத சிலர் இன்று அதையும் எதிர்க்கிறார்கள் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

எவ்வாறான தடைகள் மற்றும் விமர்சனங்கள் வந்தாலும் மக்களுக்காக முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களை நிறுத்தப் போவதில்லை என தெளிவுபடுத்திய ஜனாதிபதி, பொய்யான பிரச்சாரங்களினால் மக்களை ஏமாற்றுவதற்கு இடமளிக்க முடியாதெனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி நேற்று (24) பிற்பகல் நுகேகொட வெளிபார்க் பூங்காவில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இணை அமைப்பு பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே இக்கருத்துக்களை தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து 16 மாதங்களே ஆன குறுகிய காலத்தில் நாட்டில் தெளிவான கொள்கை ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தம்மிடம் இம்மாற்றத்தையே எதிர்பார்த்ததாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, தேசிய பாதுகாப்பை உறுதி செய்து கலாசாரம், எமது பாரம்பரியம், தேசிய விழுமியங்கள் மற்றும் நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததாகவும் குறிப்பிட்டார்.

இக்காலத்திற்குள் உருவான பிரச்சினைகளுக்கன்றி கடந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகளுக்கே அரசாங்கம் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. 

19 ஆவது திருத்தத்தின் மூலம் உருவான தவறு அதில் ஒன்றாகும். 20வது திருத்தத்தை நிறைவேற்றி அத்தவறை திருத்தினோம். தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியதால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. அதைப்பற்றி விசாரணை செய்ய அவர்களே நியமித்த உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவுக்கு பொறுப்புக் கூற வேண்டிய நிலையும் எமது அரசாங்கத்திற்கே ஏற்பட்டுள்ளது.

எம்.சி.சி.ஒப்பந்தத்தைப்போல் கிழக்கு முனையத்தை குத்தகைக்கு வழங்க ஒப்பந்தம் செய்ததும் கடந்த அரசாங்கத்தின் காலத்திலாகும். அது தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைக்கும் அரசாங்கம் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

அவர்களே உருவாக்கிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டி அன்றைய அரசாங்கத்தில் இருந்தவர்களே இன்று அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி , அரசாங்கத்தின் கொள்கை மற்றும் திட்டங்களை செயற்படுத்துவதுடன் அவர்கள் ஏற்படுத்திய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காகவும் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மரங்களை வெட்டுவதற்கோ சுற்றாடலை அழிப்பதற்கோ அரசாங்கம் எவ்வித அனுமதியும் வழங்கவில்லை. எதிர்க்கட்சி நாட்டில் பாரிய காடழிப்பு இடம்பெறுவதாக பொய்யான பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றது. 

மாவட்ட ரீதியாக காடழிப்பு இடம்பெறுமாயின் அதைப் பற்றி கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாவட்ட செயலாளர்களுக்கு தான் இன்று பணிப்புரை விடுத்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், எஸ்.எம்.சந்திரசேன, காமினி லொக்குகே, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான டி.வி.சானக்க, கனக்க ஹேரத், பியல் நிஷாந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான லலித் எல்லாவெல, சாகர காரியவசம், உதயன கிரிந்திகொட, ஜயந்த கெடகொட ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.