வாகனங்களின் டயர்கள் தேய்ந்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை பசறை பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து வாகனங்களின் டயர்களின் நிலைமை குறித்து கண்காணிக்குமாறு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தேய்ந்த நிலையில் உள்ள டயர்களுடன் வாகனத்தை செலுத்துவோருக்கு மூவாயிரத்து ஐநூறு ரூபா அபராதம் விதிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார்.
இதேவேளை வீதியில் போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கு பொருத்தமற்ற மோசமான நிலையில் உள்ள வாகனங்களை செலுத்துவோருக்கு 25000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகன விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் மூன்று நாட்களுக்கு வாகனங்களின் டயர்கள் மற்றும் வாகனத்தின் தரம் குறித்து காவல்துறை உத்தியோகத்தர்கள் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியால காலப் பகுதியில் வாகன விபத்துக்களினால் நாடு முழுவதிலும் எட்டு மரணங்கள் பதிவாகியுள்ளன.
கவனயீனமாக வாகனம் செலுத்துதல், தரம் குறைந்த அல்லது வீதியில் போக்குவரத்து செய்ய உசிதமற்ற வாகனங்களை செலுத்துதல் ஆகியனவற்றினால் நாள்தோறும் சராசரியாக 9 மரணங்கள் சம்பவிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
Post a Comment