பெரும் சோகத்தில் மூழ்கிய மலையகம் : பாடசாலை சென்ற முதல் நாளிலேயே விபத்தில் இறந்த சிறுவனின் இறுதிக்கிரியை.

பதுளை அசேலபுர கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் சிவனேசன், செல்வராஜா யோகேஸ்வரி ஆகியோருக்கு மகனாப் பிறந்தவரே சிவனேசன் வருண் பிரதீஸ் என்ற ஆறு வயதுச் சிறுவனாவார். 

இச்சிறுவனுக்கு புத்தம் புதிய சீருடையை உடுத்திவித்து, புதிய பாதணிகள் அணிவித்து, புதிய புத்தகப் பையை முதுகில் மாட்டிவிட்டு, தாயும், தகப்பனின் தாயும், சகோதரியும், சகோதரனுமாக ஐவர் பஸ் மூலம் பாடசாலைக்கு கூட்டி வந்தனர். 

குறிப்பிட்ட வருண் பிரதீஸ் என்ற மாணவனும், அவருடைய சகோதரனும் இரட்டைக் குழந்தைகளாளவர். 

இவ்விருவருக்கும் பதுளை சரஸ்வதி கனிஸ்ட வித்தியாலயத்தில் தரம் 1 ற்கு கல்வி பயிலுவதற்கான அனுமதி கிடைத்தது. அதைத் தொடர்ந்து, மேற்படி ஐவரும் பாடசாலைக்கு 15 ஆம் திகதி காலை வந்து கொண்டிருந்தனர்.

இவ் ஐவரும் வந்த போதிலும், வருண் பிரதீஸ் தனது பாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு பாட்டியுடன் முதலில் ஓடி வந்தார்.

அவர்களுக்கு பின்பு சிறுவனின் தாயும் உடன் பிறந்த சகோதரனும், சகோதரியும் வந்தனர். அவர்களில் வருண் பிரதீஸின் உடன் பிறந்தவர் தனது தாயின் கையைப்பிடித்துக்கொண்டு வந்தார். 

அவ்வழியில வந்த கனரக லொரியொன்று பாட்டியையும், பேரனான வருண் பிரதீசையும் முட்டி மோதியது. அந்நிலையில் சிறுவன் அவ்விடத்திலேயே பலியானதுடன் பாட்டியும் ஆபத்தான நிலையில் இருவரும் பதுளை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் இறந்து விட்டதாகவும், பாட்டியின் நிலை கவலைக்கிடமாகவிருப்பதாகவும் தெரிவித்தனர். 

இந்நிலையில், சிறுவனின் தாயான செல்வராஜா யோகேஸ்வரி கண்ணீர் மல்க, 'எனது இரு பிள்ளைகளையும் பதுளை சரஸ்வதி கனிஸ்ட வித்தியாலயத்தில் அனுமதித்துவிட்டு, மகளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு கூட்டிச்செல்லவே திட்டமிட்டிருந்தோம். எனது மகள், தம்பிமார் இருவரையும், சரஸ்வதி கனிஸ்ட வித்தியாலயத்தில் அனுமதித்துவிடுவதை பார்த்துவிட்டு செல்கின்றேன் என்று கூறியதன் பின், அவரும் எம்முடன் வந்தார் அதன் பிறகு ஏற்பட்ட விபரீதம், என்னை திக்குமுக்காடச் செய்து விட்டது. மேலே என்னால் எதுவுமே கூறக்கூடிய நிலையில்லை நான் பைத்தியம் பிடித்தவளாகவே இருக்கின்றேன். எனது உயிரே எனக்கு வெறுத்து விட்டது என்று அழுது புலம்பினார்.

நேற்று மாலை 6.00 மணியளவில், பதுளை கவரக்கலை தோட்ட மயானத்தில் வருண் பிரதீசின் இறுதிகிரியைகள் மேற்கொள்ளப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். சகலரும் பெரும் சோகத்திலேயே ஆழ்ந்திருந்ததுடன், அசேலபுர கிராமம், கவரக்கலை தோட்டம் ஆகியவற்றின் மக்கள் பெரும் சோகத்திலேயே, ஆழ்ந்திருப்பதை காணக்கூடியதாகவிருக்கின்றது. 

பதுளை சரஸ்வதி கனிஸ்ட வித்தியாலயத்தின் முன்பாக சிறுவனின் சடலத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன், மேற்படி வித்தியாலயத்தில் தமது அஞ்சலியை செலுத்துமுகமாக, வித்தியாலயத்தில் வெள்ளைக்கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. வித்தியாலய ஓழுங்கை மற்றும் அதனைச் சூழ சிறுவனின் சடலம் சுமந்து வரப்பட்டது. 

'பாடசாலைகளுக்கு செல்ல வேண்டும் நன்றாகப் படிக்க வேண்டும்' என்ற சிறுவனின் அவாவினையும், ஆசையினையும் நிறைவேற்றும் பொருட்டு, சிறுவனின் சடலம் வித்தியாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுவனின் சடலம் பதுளைக்கு கொண்டுவரப்படுகின்றதென்ற தகவல்கள் கிடைத்ததும், மக்கள் கூட்டம் அங்கு திரண்டது. 

பதுளை சரஸ்வதி கனிஸ்ட வித்தியாலயத்திற்கு செல்லும் ' தேவாலய வீதி என்ற ஓழுங்கை மிகுந்த சனம் மற்றும் வாகன நெரிசலான பகுதியாகும். இவ்ஓழுங்கையின் இருபக்க நுழைவாயில்கள் எவ்வித பாதுகாப்புகளும் இல்லாத இடமாகும். வீதி ஒழுங்கு முறைமைகள் இவ் ஒழுங்கையில் மீறப்பட்டு வருகின்றன. ஒழுங்கை நுழைவாயிலில் ஒரு புறம் எரிபொருள் நிலையம் மறுபுறம் ஆட்டோதரிப்பு நிலையம் மற்றும் தனியார் பஸ் லொறிகள் வேன்கள் நிறுத்துமிடம் அதிஸ்ட இலாபச்சீட்டு விற்பனை நிலையம் வாகன சீரமைப்பு நிலையம் என்ற வகையில் வாகன நெரிசல் மக்கள் நெரிசல் ஆகியன நிறைந்திருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. இவ் ஒழுங்கை வாகனங்கள் செல்வதற்கு ஒரு வழிப்பாதை என்று கூறப்பட்ட போதிலும் அம் முறைமை மீறப்பட்ட வகையிலேயே காணப்படுகின்றன.

ஒழுங்கையின் இரு பக்க நுழைவாயில்களிலும் பாதைக்கடவைகள் எதுவும் போடப்படவில்லை. தமிழ்ப்பாடசாலையென்பதாலோ என்னவோ இப்பாடசாலை குறித்து சம்மந்தப்பட்டவர்கள் எவரும் மாணவர்களது வீதிப்பாதுகாப்பு குறித்து கவனத்திற்கெடுப்பதில்லை. 

இத்தகைய வாகன நெறிசல்கள் வீதி ஒழுங்கு முறைமைகள் மீறப்பட்ட நிலையினாலேயே விபத்து இடம்பெற்று பெறுமதிமிக்க சிறுவனின் உயிர் பிரியக் காரணமாக அமைந்தது இந்நிலைக்கு பதுளைப் பொலிசாரும் பதுளை மாநகர சபையினதும் பொறுப்பேற்க வேண்டும். 

இவ் ஒழுங்கை நுழைவாயிலின் முன்பாக பதுளை மாவட்ட நீதிபதியின் வாசஸ்தலமும் இருந்து வருகின்றது. 

மேற்படி விபத்து குறித்து, பதுளை பொலிசார் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய லொரிச் சாரதி கைது செய்யப்பட்டு, பதுளை மஜிஸ்ரேட் நீதிபதி முன்னிலையில், ஆஜர் செய்த போது, நீதிபதி அந்நபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இவ்விபத்து 15 ஆம் திகதி காலை 7.35 மணிக்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

பதுளை அரசினர் வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சாமிவேல் ராஜேஸ்வரி என்ற 63 வயது நிரம்பிய பாட்டியின் நிலை, கவலைக்கிடமாகவுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.