தற்போதைய காலக்கட்டத்தில் இணைய ஊடுருவல் மூலமாகவே பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் மக்கள் மத்தியில் பரப்பப் படுவதாக ஜனாதிபதி ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆய்வுகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழு இந்த விடயத்தினை குறிப்பட்டுள்ளது.
இதன்படி, ஐ.எஸ். தவ்ஹீத் மற்றும் வஹாபிசம் உள்ளிட்ட தீவிரவாத கருத்துக்கள் சமூக வலைதளங்கள் ஊடாகவே அதிகமாக இலங்கைக்குள் கொண்டுவரப்படுவதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்காரணமாக, நாட்டில் சமூக வலைதளங்கள் மற்றும் சைபர் செயற்பாடுகள் தொடர்பான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
அத்துடன், மதரஸாக்கள் மற்றும் அரபு பாடசாலைகளை அரசாங்கத்தின் கட்டுபாட்டின் கீழ்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது.
மேலும், மதரஸா பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மௌவிகள் தொடர்பான விடயங்கள் முறையாக பதிவு செய்யப்படுவதுடன், வெளிநாட்டு நிதி பறிமாற்றம் குறித்தும் உரிய நியமங்கள் ஏற்பபடுத்தப்படவேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மத நம்பிக்கை மற்றும் சமய காரணிகளை மையமாக கொண்டும், மத ரீதியான பெயர்களிலிலும், அரசியல் கட்சிகள் பதிவுசெய்யப்படுதல் தடுக்கப்படவேண்டுமெனவும், ஜனாதிபதி ஆணைக்குழு தமது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தற்போதைய நிலையில் அவ்வாறு பதிவுசெய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் பெயர்களை மாற்றம் செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்படுதல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
இதேவேளை, மதம் அல்லது இன வேறுபாட்டை தூண்டும் வகையில் செயற்படும் அமைப்புகள் மற்றும் நபர்களை பிடியாணை இன்றி கைது செய்யும் வகையிலான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் இயங்கும் பிரிவெனாக்கள், ஞாயிறு பாடசாலைகள், அறநெறி பாடசாலைகள் மற்றும் மதரசாக்கள் என அனைத்தையும் ஒரே நிறுவனத்திற்குள் கொண்டுவரவும் யோசனை முன்வைக்கபட்டுள்ளது.
மேலும், மதங்களை அடிப்படையாக கொண்ட அனைத்து விவகாரங்களும் ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவரப்படுவதுடன், அது ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்படவேண்டுமெனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, வெவ்வேறு சமூகங்களுக்கிடையிலான வேறுபாடுகளைத் தடுக்க ஒரு நாடு ஒரு சட்டம் என்ற விடயத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி ஆணைக்கு தமது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
Post a Comment