ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 46 ஆவது வழக்கமான அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் பெப்ரவரி 22 (இன்று) ஆரம்பமாகிறது.
இன்று ஆரம்பமாகும் இக் கூட்டம் எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டத் தொடர்பில் உலக நாடுகளின் மனித உரிமை நிலை குறித்து கலந்துரையாடப்படவுள்ளதுடன் இலங்கை குறித்து விவாதம் ஒன்றும் நடைபெறவுள்ள நிலையில் புதிய பிரேரணை ஒன்றும் தாக்கல் செய்யப்படவுள்ளது.
பெப்ரவரி 23 ஆம் திகதி மாலை வேளையில் அல்லது 24 ஆம் திகதி காலையில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உரையாற்றவிருக்கின்றார். அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இம்முறை கொழும்பில் இருந்தவாறு இணைய வழியில் ஜெனிவா பேரவையில் உரையாற்றவுள்ளார்.
முதல் மூன்று நாட்கள் பிரதான ஆரம்ப அமர்வுகள் இடம்பெறவுள்ளன. பெப்ரவரி 22 முதல் 24 ஆம் திகதி 12 மணிவரை நடைபெறவுள்ள ஆரம்ப அமர்வுகளில் பல நாடுகள் உரையாற்றவுள்ளன.
அதாவது பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் ஆரம்ப அமர்வில் உரையாற்றவுள்ளனர். முக்கியமாக அமெரிக்கா சீனா இந்தியா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் ஆரம்ப அமர்வில் உரையாற்றுவதற்கு ஏற்பாடாகியுள்ளது.
அத்துடன் ஜேர்மனி, தென்னாபிரிக்கா , டென்மார் சுவீடன் , ஜப்பான் , பெல்ஜியம், அவுஸ்திரேலியா , கனடா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் பேரவை அமர்வில் உரையாற்றவுள்ளனர்.
மேலும் இன்று நடைபெறும் அமர்வில் சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் லீ உரையாற்றவுள்ளதுடன் 23 ஆம் திகதி அமர்வில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உரை நிகழ்த்தவிருக்கிறார். இதன்போது இலங்கை விவகாரம் குறித்து பிரஸ்தாபிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.,
மேலும் சீன மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் இன்றும் நாளையும் உரையாற்றும்போது இலங்கை தொடர்பாக பிரஸ்தாபிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உரையாற்றும்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை நிராகரிப்பார் என்றும் அது தவறான தகவல்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே இலங்கை அரசாங்கமானது அந்த அறிக்கையை நிராகரித்து 18 பக்க அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
இது இவ்வாறு இருக்க இம்முறை 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக மற்றுமொரு புதிய பிரேரணை பிரிட்டன் கனடா ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளினால் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அந்த அறிக்கையை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.
இது தொடர்பில் கடந்த சில வாரங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்திவருகின்றார்.
அதன்படி இலங்கை குறித்து புதிய பிரேரணை ஒன்று கொண்டுவரப்படும் என்று பிரிட்டன் தூதுவர் அண்மையில் சுமந்திரனிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால் இம்முறை புதிய பிரேரணை ஜெனிவா மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்படும் பட்சத்தில் அதனை இலங்கை முழுமையாக நிராகரிக்கும் என்றும் இது தொடர்பாக வாக்கெடுப்பை இலங்கை கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கெடுப்பை கோரும் பட்சத்தில் சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கையை ஆதரிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக சீனா இலங்கையிடம் உறுதியளித்திருக்கின்றது. அந்த வகையில் இம்முறை ஜெனிவா மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரானது இலங்கைக்கு முக்கியத்துவம் மிக்கதாக அமைந்திருக்கிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமைப் பேரவை நிறைவேற்றப்பட்டு இலங்கையினால் இணை அனுசரணை வழங்கப்பட்ட 30 .1 என்ற பிரேரணை பின்னர் 2017 ஆம் ஆண்டில் 34-1 என்றும் பின்னர் 2019 ஆம் ஆண்டில் 40-1 என்றும் நீடிக்கப்பட்டது. அந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்னைய நல்லாட்சி அரசாஙகம் அனுசரணை வழங்கியது., ஆனால் 2019 ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் 2020 ஆம் ஆண்டு அனுசரணையை மீளப்பெற்றது. அந்த வகையிலேயே இம்முறை புதிய பிரேரணை கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment