மீண்டும் எம்.பியாகிறாராம் ரனில்; வெளியானது கட்சியின் உள்ளகத் தகவல்கள்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமைக்காக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் பாராளுமன்றத்தில் பதவியேற்கவுள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமைக்காக அவரை பெயரிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

எனினும், ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானம் கிடைக்கும் வரையில் அந்த நடவடிக்கை தாமதமடைவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த மாத இறுதிக்குள் குறித்த தீர்மானம் கட்சிக்கு அறியப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத்தேர்தலில், பொதுமக்கள் வாக்களிப்பின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்த ஒரு ஆசனமும் கிடைக்கப்பெறவில்லை.

எனினும், கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்படையில் ஒரே ஒரு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமை மாத்திரம் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்தது.

அந்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமைக்காக, பலரின் பெயர்கள் முன்னதாக முன்மொழியப்பட்ட நிலையில், அது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக கட்சியின் செயற்குழு பல தடவைகள் கூடின.

எனினும், அந்த சந்தர்ப்பங்களில் தேசிய பட்டியல் தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் போனதுடன், கட்சியை மறுசீரமைப்பு செய்வது குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டது.

இவ்வாறான பின்னணியில் அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுக்கு புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமைக்காக கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பெயரிட வேண்டுமென்றும் இணக்கம் காணப்பட்டிருந்தது.

இதன்படி, அதுகுறித்து கட்சித் தலைவரின் கருத்து கோரப்பட்டுள்ள நிலையில், அவரின் தீர்மானம் கிடைத்ததை அடுத்து, அதனை சபாநாயகருக்கு பெயரிட்டு அனுப்புவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.