வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்த பொத்துவில் - பொலிகண்டி பேரணி திட்டமிட்டபடி இன்று (03) காலை கொட்டும் மழைக்கு மத்தியில் ஆரம்பமானது.
பொத்துவில் தொடக்கம் இடையிடையே அதிரடிப்படை மற்றும் பொலிசாரின் தடைகள் மறிப்புகள் இருந்தன. அத்தனை தடைகளையும் தாண்டி இப்பேரணி நடைபெற்றுவருகிறது.
பொத்துவில் தொடக்கம் திருக்கோவில் வரையான பிரதேசத்தில் கனமழை பெய்த பொழுதிலும் அனைவரும் நனைந்தவண்ணம் பேரணியில் பங்கேற்றனர்.
த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் இரா. சாணக்கியன், த. கலையரசன் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி. ஜெயசிறில், கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜி. சிறிநேசன், சி.லோகேஸ்வரன் உள்ளிட்டோர் மற்றும் சமயத்தவைர்கள் சிவில் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்தும், கண்டித்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டம், இன்று(03) தொடங்கி, 06ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், தொல்பொருள் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பூர்வீக வாழிடங்களை ஏப்பமிடல், பேரினவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் அரசின் போக்குகள், ஜனாஸா எரிப்பு என்பவற்றைக் கண்டித்தே இந்த கண்டன நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment