இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினம் இன்று

பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து இலங்கை திருநாடு சுதந்திரம் பெற்று, அந்நிய ஆட்சியைத் தவிர்த்து, தம்மைத் தாமே ஆளத்தொடங்கி இன்றுடன் 73 ஆண்டுகள்.

73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று (04) காலை நடைபெறவுள்ளன.

‘சுபீட்சமான எதிர்காலம் சௌபாக்கியமான தாய்நாடு’ எனும் தொனிப்பொருளில், சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

நிகழ்வுகளில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை மற்றும் கலை, கலாசார நிகழ்வுகள் ஆகியன இடம்பெறவுள்ளன.

இன்று காலை 8 மணியளவில் ஜனாதிபதியின் வருகையுடன் பிரதான நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அதனை தொடர்ந்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளார்.

இன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன் சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் இன்று அதிகாலை முதல் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளூடான வாகனப் போக்குவரத்து, இன்று அதிகாலை 4 மணி முதல், பிற்பகல் 1 மணி வரை முழுமையாக மட்டுப்படுத்தப்படுகின்றன. இதனால் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக தாமரை தடாக சுற்றுவட்டத்தின் முன்பாக, சுதந்திர சதுக்கத்தை நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளன. பொது நூலக சுற்றுவட்டம், சுதந்திர சதுக்கத்தை நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கும் குறித்த காலப்பகுதியில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. இதனால் சாரதிகள் மாற்று வீதிகளையே பயன்படுத்த வேண்டும். சுதந்திர சதுக்கம், சுதந்திர மாவத்தையை அண்மித்த பகுதிகளிலும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. முச்சந்திகளில் போக்குவரத்து பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலைமைக்கு மத்தியில், இம்முறை சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றியே சுதந்திர தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார சேவை, தொற்றுநோய் மற்றும் கொவிட் தொற்று கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ஏனையோருக்கு தொற்று பரவாதிருக்கும் வகையில் சுதந்திர தினத்தை கொண்டாடுமாறும் விசேட வைத்திய நிபுணர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.