நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 349 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 57 ஆயிரத்து 936 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 423 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதனை அடுத்து, கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 684 ஆக உயர்வடைந்துள்ளது.
இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 7 ஆயிரத்து 974 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 814 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக இதுவரையான காலப்பகுதியில் 15 இலட்சத்து 93 ஆயிரத்து 668 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வலயத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கல்முனை வடக்கு மற்றும் தெற்கு உட்பட சாய்ந்தமருது, காரைதீவு அட்டாளைச்சேனை ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் இவ்வாறு அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதனிடையே கடந்த 27 நாட்களின் பின்னர் காத்தான்குடி நகரில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 30ஆம் திகதி முதல் மூடப்பட்டிருந்த காத்தான்குடி நகரில் வர்த்தக நிலையங்கள் சிலவற்றை திறப்பதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
மேலும் குறித்த பகுதியின் ஏனைய பிரதேசத்தின் 10 கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் தொடர்ந்து அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் மதுரங்குளி பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை அநுராதபுரம் தேவநம்பியதிஸ்ஸ புர பகுதியில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாக இன்று முதல் குறித்த பகுதிக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுசுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
Post a Comment