அதேவேளை, மேற்படி சடலங்களை தகனம் செய்வது தொடர்பான சுகாதார அமைச்சின் தீர்மானங்களில் எந்த மாற்றமும் கிடையாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் மேற்படி விவகாரம் தொடர்பில் பல்வேறு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், அரசாங்கம் தற்போதைய நடைமுறையில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லையென்றும் குறிப்பிட்டார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்;
நாம் கொரோனா வைரஸ் மரணம் தொடர்பான சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கு எந்த அனுமதியையும் வழங்கவில்லை. வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட மரணமெனின் கண்டிப்பாக தகனம் செய்யும் நடைமுறையே பின்பற்றப்படும். அத்தகைய உறுதியான தீர்மானத்திலேயே சுகாதார அமைச்சு உள்ளது.
சுகாதார அமைச்சு குழுவொன்றை அமைத்து அவர்களின் பரிந்துரைக்கமையவே கடந்த மார்ச் மாதம் முதல் இந்த நடைமுறையை பின்பற்றி வருகிறது.
நாம் இந்த விடயம் தொடர்பில் மருத்துவத்துறை நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளோம். அவர்கள் அது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். அதனையே நாம் எதிர்பார்த்துள்ளோம்.
அந்த அறிக்கை கிடைத்ததும் நாம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் மேற்கொள்ளப்படும் தீர்மானத்தை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துவோம்.
அதுவரை சுகாதார அமைச்சின் தீர்மானம் கொரோனா வைரஸ் மரணங்களை தகனம் செய்வதே. அதேவேளை வைரஸ் தொற்று மரணங்கள் மூலமான சடலங்களை விரைவாகவே தகனம் செய்வதே சுகாதார அமைச்சின் தீர்மானமாகும். அந்த தீர்மானத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் சுகாதார அமைச்சு மேற்கொள்ளவில்லையென்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.
Post a Comment