ஜனாஸா எரிப்புக்கு தீர்வு இல்லாவிடின் நாடு முழுவதும் போராட்டம் ; ரிஷாட் பதியுதீன்

முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்யும் விடயத்தில் உரிய தீர்வை இந்த அரசு தராவிட்டால், அரசுக்கு எதிரான அமைதிப் போராட்டம் ஜனநாயக முறையில் நாடு தழுவிய ரீதியில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கொவிட்-19 காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு எதிராக இன்று (புதன்கிழமை) காலை கொழும்பு – பொரளை பொது மயானத்துக்கு முன்பாக இடம்பெற்ற அமைதி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இந்த விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்கு அரசாங்கம் நியமித்திருக்கும் வைத்தியர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட குழுவில், இனவாதிகளும் மதவாதிகளும்தான் அதிகமாக இருக்கின்றார்களேயொழிய, தகுதியானவர்கள் அதில் உள்வாங்கப்படவில்லை.

எனவே, ஒரு சமூகத்துக்கு எதிராக இவ்வாறான திட்டமிட்ட செயற்பாடுகளை இந்த அரசு முன்னெடுக்குமாக இருந்தால் அதைவிட ஒரு கீழ்த்தரமான அரசாங்கத்தை இந்த நாட்டிலே காண முடியாது.

இதேவேளை, அமெரிக்கா, கனடா, லண்டன், பிரான்ஸ், இத்தாலி, கட்டார் போன்ற இன்னும் பல நாடுகளில் வாழும் எமது மக்கள் இந்த மோசமான செயலுக்கு எதிராக ஒன்றுபட்டு குரல்கொடுப்பதை நாம் பார்க்கின்றோம்.

உலக நாடுகளில் வாழும் எமது மக்கள் இவ்வளவு காலமாக இலங்கைக்கு ஆதரவாகவே குரல் கொடுத்திருக்கின்றனர். ஆனால் இன்று இந்த ஈனச் செயலுக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு இலங்கைக்கு எதிராக குரல் கொடுக்கின்றார்கள். எனவே இந்தச் செயலை இன்றோடு நிறுத்துங்கள்.

மேலும் ஜனாஸா எரிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகக் கூறியுள்ள போதிலும் நேற்று வியங்கல்ல பகுதியில் மோசமான முறையில் உடலங்கள் எரிக்கப்பட்டுள்ளதாக எமக்கு அறியக்கிடைத்தது.

இதற்கு முன்னிருந்த எந்த அரசும் இவ்வாறானதொரு மோசமான செயலை எமது சமூகத்திற்கு செய்யவில்லை.

ஆகையால் இந்த ஈனச் செயலை அரசாங்கம் உடன் நிறுத்தாவிட்டால் எமது சமூகம் மட்டுமல்ல உலக நாடுகளும் சர்வதேச சமூகமும் ஒருபோதும் இந்த அரசை மன்னிக்கமாட்டர்கள். இது எமது நாட்டுக்கு பேராபத்தாக அமையும்.

ஜனாஸா எரிப்பு விடயத்தில் உரிய தீர்வை இந்த அரசு தராவிட்டால் அரசுக்கு எதிராக இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைதியான உரிமைப் போராட்டம், நாடு தழுவிய ரீதியில் தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன் இந்த ஈனச் செயலை சர்வதேசமயப்படுத்தி இதற்கான தக்கபாடத்தைப் புகட்டுவோம்” என மேலும் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.