20 வருடங்களின் பின் இலங்கையில் சூறாவளியின் நகர்வு; தற்போதைய நிலைவரம்!

புரெவி எனப்படும் இந்த சூறாவளியின் காரணமாக நேற்று 2 ஆம் திகதி முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் அதிக மழை மற்றும் வேகமான காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்திருந்தது. அதற்கமையே நேற்றைய தினம் பல பகுதிகளிலும் சீரற்ற வானிலையே நிலவியது.

நாட்டில் பல பகுதிகளிலும் காற்றின் வேகம் அதிகமாகக் காணப்பட்டதோடு , பனிமூட்டத்துடன் கூடிய தொடர்ச்சியான மழை வீழ்ச்சியும் பதிவாகியது.

கிழக்கு மாகாணத்தில் இது போன்ற சீரற்ற வானிலை தொடர்ச்சியாகக் காணப்பட்டதால் அப்பகுதிகளில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதன் காரணமாக பாதிக்கப்படும் மக்களின் நலன் கருதி நேற்று புதன்கிழமை முதல் கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் , இன்று வியாழக்கிழமை முதல் வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டைச்சுற்றி சூறாவளியின் நகர்வு 20 வருடங்களுக்கு பின்னர் இடம்பெறுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் 2000 ஆம் ஆண்டில் நாட்டில் சூறாவளி அழுத்தம் ஏற்பட்டதுடன், அதன் பின்னர் சூறாவளி நாட்டுக்கு அருகாமையில் ஏற்பட்ட போதிலும் அதனால் நேரடியான தாக்கம் இலங்கைக்கு ஏற்படவில்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இந்நிலையில், புரெவி சூறாவளி முல்லைத்தீவு மற்றும் திருகோணமலைக்கு இடையில் நேற்று இரவு (02.12.2020) 8.45 மணியளவில் தரையை தட்டி இலங்கைக்குள் பிரவேசித்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருந்தது.

இந்தச் சூறாவளி முல்லைத்தீவு ஊடாக நகர்ந்து மன்னார் ஊடாக அரபிக்கடலை சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் புரெவி சூறாவளியானது குச்சவெளியூடாக இலங்கையின் கரையை கடந்து தற்போது யாழ்ப்பாணத்தினை மையம் கொண்டு மன்னார் ஊடாக வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வேகமானது மணிக்கு 60 - 80 கிலோமீற்றர் காணப்படலாம்.

இதனால் வட பகுதியில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியமுள்ளதாகவும் நாடளாவிய ரீதியில் பலத்த காற்றும் மழை வீழ்ச்சியும் பதிவாகும்.

இதேவேளை, புரவி சூறாவளியால் இலங்கைக்கு பாரியளவில் பாதிப்பு ஏற்படாத போதும் எதிர்வரும் மணித்தியாலங்களில் காற்றும் மழை வீழ்ச்சியும் பதிவாகும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரவித்துள்ளது.

இந்த சூறாவளியின் காரணமாக இன்று வியாழக்கிழமை வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.

கிழக்கு மாகாணத்தில் மணிக்கு 50 – 60 கிலோ மீற்றர் வேகத்திலும் , ஏனைய மாகாணங்களில் 40 – 50 கிலோ மீற்றர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

இன்று வியாழக்கிழமை வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும்.

இந்த இரு மாகாணங்களும் அதிக அபாயம் மிக்கவையாக அடையாளப்படுத்தப்படுகின்றன. இதே வேளை வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை அவதானத்துடன் இருக்க வேண்டிய மாகாணங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன.

சீரற்ற வானிலையால் வட மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளையும் இன்றும் நாளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏதேனுமொரு விதத்தில் பாதிக்கப்படக்கூடிய மக்களின் நலன்புரி முகாம்களாக பாடசாலைகளை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் மற்றும் கடற்போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கு மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரையோரத்தில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், பாதிக்கப்பட்ட இடங்களைச் சேர்ந்தவர்கள் வீடுகளுக்குள் தங்கியிருக்குமாறும் கோரப்படுகிறார்கள்.

முறிந்து விழக்கூடிய மரங்கள், மின்கம்பங்கள் பற்றி அவதானமாக இருக்க வேண்டும். இடிமின்னல் தாக்கம் ஏற்படுகையில் கம்பிவழி தொலைபேசிகள், இலத்திரனியல சாதனங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பட்சத்தில் தத்தமது பிரதேசங்களைச் சேர்ந்த இடர்காப்பு முகாமைத்துவ நிலைய அதிகாரிகளைத் தொர்பு கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புரெவி புயல் அச்சுறுத்தலையடுத்து தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாண சூழ்நிலை காரணமாக யாழ் மக்களின் அவசர தேவைகளுக்காக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அவசர செயல்ப்படுத்துகை நிலையத்துடன் தொடர்பு கொள்வதற்கு வசதியாக 24 மணித்தியாளங்களும் செயல்படக்கூடிய தொலை பேசி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

0773957894 , 0212117117 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் பொது மக்கள் தொடர்பு கொள்ள முடியும் என்று யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் டி.என்.சூரியராஜா அறிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.