நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 280 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 215 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், நேற்று மாத்திரம் 439 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 839 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 204 பேர் விசேட அதிரடிப்படையினர் என கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
அத்துடன், சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 534 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக நேற்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு 2 பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா தொற்று ஏற்பட்டமை மற்றும் கடுமையான இருதய நோய் ஆகியன அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 74 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 368 பேர் குணமடைந்து வீடுகளுக்கு நேற்றைய தினம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 462 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 5 ஆயிரத்து 935 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக இதுவரை 7 இலட்சத்து 13 ஆயிரத்து 652 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment